வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வழியூடான கண்டி - பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கியும்,பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவித்த போது இவ்விரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 15 பேர் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும்,ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்ப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேககட்டுப்பாட்டை மீறிய இவ்விரு பஸ்களும் மோதிக்கொண்டதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.