சொந்த மகளையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வியாழனன்று 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.
மகளையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த உலக நீதி, இயற்கை நீதி, சமூக நீதி என்ற அனைத்துக்கும் முரணான ஒரு குற்றச் செயலாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு தை மாதமளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சட்டமா அதிபரினால் குற்றம் சாட்டப்பட்டு, தந்தை கைது செய்யப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி 11 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.