நாட்டில் தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறைத்திருந்தாலும், போராட்டம் ஊடாக அவரை விரட்டியடித்தார்கள் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டில் தேர்தல் நிச்சியமாக நடத்தப்பட வேண்டும். அன்று மாகாணசபைத் தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்காக செயற்பட்டவர்கள் இன்று அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது எனவும் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம், தேர்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்பு தேர்தலைக் காலந்தாழ்த்தி இருக்க மாட்டார்கள். நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான நீண்டக் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.