இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் "வெட்டுகளை" நிறுத்துங்கள். கிரிகட் இந்நாட்டின் ஐந்தாம் மதம். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள் என பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
விளையாட்டு துறை பாதீடு ஒதுக்கீட்டு பிரேரணையின் போது, அச்சமயம் சபையில் பிரசன்னமாகி இருந்த விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை விளித்து உரையாற்றிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,
யாழ் பெற்றிக்ஸ், மன்னார் சேவியர்ஸ் ஆகிய கல்லூரி அணிகள், எனது தொகுதி கொழும்புக்கு வந்து, 20 வயதிற்கு உட்பட்ட தேசிய பாடசாலை கால்பந்து வெற்றிக்கிண்ண இறுதி போட்டியில் விளையாடுகிறார்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு தருணம். கால்பந்தில் தமிழ் பிள்ளைகளுக்கு இருக்க கூடிய திறமைகளை பாருங்கள்.
அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீங்கள் இளைஞர். புதிதாக சிந்திக்க கூடியவர். கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாவது மதம். அதைக்கொண்டு அரசியல்வாதிகள் நிலைநாட்ட தவறிய இன ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். கிரிகட்டோ, கால்பந்தோ, விளையாட்டை கொண்டு தேசிய ஐக்கியத்தை, உருவாக்க உழையுங்கள்.
இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் "வெட்டுகளை" நிறுத்துங்கள். இங்கே பிரச்சினை என்னவென்றால், இலங்கையின் ஈழத்தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்கு திறமை இருந்தும் இடமளிக்கப்படுவதில்லை என்பதுவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள அரச கட்டமைப்பு வளங்களை வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் வழங்குவதில்லை என்பதுவும்தான்.
இதற்கு என்ன காரணம்? ஒளிவு மறைவு இன்றி அனைத்தும் சிங்கள-பெளத்த மயம் என்ற பெருந்தேசியவாதம்தானே.
இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா நாடுகளிலும் இனவாதம் முழுக்க இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றையும் மீறி இந்நாட்டு அணிகளில் இன, மத, நிற வாதங்களை மீறி பன்மைதன்மை இருப்பதை பார்க்கிறோம்.
உலக கிண்ண கால்பந்து போட்டிகளின், "வெள்ளைக்கார" நாட்டு அணிகளில் "கறுப்பின" வீரர்கள் கணிசமாக இடம் பெறுவதை பாருங்கள். இங்கே இது அறவே இல்லை. அதை பார்த்தாவது திருந்துங்கள்.
"ஐயாம் எ ஸ்போர்ட்ஸ்மேன்". நான் ஒரு விளையாட்டு ஆர்வலன். விளையாடும் வீரன். இந்த நாட்களில் இரவுகள் முழுக்க உலக கிண்ண கால்பந்து ஆட்டங்களை பார்க்கிறேன்.
இலங்கையில் கால்பந்து சம்மேளனம் செயற்படவில்லை. இன்று சம்மேளனம் இடை நிறுத்தம் ஆகி உள்ளது. முன்னாள் தலைவரின் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு ஒரு அறிக்கை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்களை தூர தள்ளி வைத்து விட்டு, தைரியமாக முடிவுகளை எடுத்து, புதிய தேர்தல்களை நடத்தி, புதிய கால்பந்து சம்மேளன செயற்குழு அமைத்து செயற்படுங்கள்.