(எம்.வை.எம்.சியாம்)
மக்கள் குழுவொன்று திரண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற
தகவலுக்கு அமைவாகவே அந்த இடத்திற்கு சென்றேன். இருப்பினும் அங்கு அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை.இருப்பினும் அவ்விடத்தில் பஷில் ராஜபக்ஷவை கண்டதாகவும் அதன் பின்னர் அவரை சந்தித்து உரையாடியாதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வருகை தந்திருந்தார். பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பஷில் ராஜபக்ஷவை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் விமான நிலையத்திற்கு சென்றமை தேசிய ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக பலரும் தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
மக்கள் குழுவொன்று திரண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாகவே அந்த இடத்திற்கு சென்றேன். நான் அன்று கட்டுநாயக்கவில் இருந்தேன். இதனை அறிந்து அவரை சந்திக்க சென்றேன். அவ்வளவு தான் இதில் வேறொன்றுமில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதைப்பார்கள். அவர் வந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைவாகவே சென்றேன். முன்னர் நான் எந்தவொரு கட்சிகவும் வேலை செய்ததில்லை. ஒரு பக்கம் சாய்பவன் நான் அல்ல.
இந்நிலையில் எனது பதவிக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. நான் வகிக்கும் பதவியும் நான் செயல்படும் விதமும் தெளிவாக இருக்கிறது.
சந்திரிக்கா குமாரதுங்க வந்திருந்தாலும் அங்கு சென்று பார்த்திருப்பேன். மக்கள் திரண்டுள்ளதாக எனக்கு செய்தி கிடைத்தது. அது என்னவென்று பார்க்கவே சென்றேன். அப்படி எதுவும் இருக்கவில்லை. பின்னர் உள்ளே சென்றேன் அங்கு பஷில் இருந்ததை பார்த்தேன் என்றார்.