அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக இந்த அரசாங்கம் வரிகளை அரவிடுகின்றது. இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மலசலகூடத்திற்கும் வரி அறவிடும் நிலை ஏற்படும். மலசல கூடத்திற்கும் மீட்டர் பொருத்தும் காலம் வரும். இவ்வாறான மோசமான நிலைக்கு நாட்டை கொண்டுவந்துவிட்டனர் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சபையில் தெரிவித்தார்.
வரவு செலவு திட்ட விவாதத்தில் இன்று (18) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதனால் அவற்றை விற்பது தீர்வாகாது என்பதே எனது நிலைப்பாடாகும். இந்த நிறுவனங்கள் ஏன் நட்டத்தை எதிர்கொண்டன என்பதை தேடிப்பார்க்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நட்டமடைந்த நிறுவனங்களை விற்கின்றோம் என கூறிக்கொண்டு இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் விற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நாட்டின் பெறுமதியை உணர்ந்த வெள்ளையர்கள் இந்த நாட்டில் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதன் மூலமாக இலங்கைக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டித்தரும் வழிமுறைகளை காண்பித்தனர். இதனை விளங்கிக்கொள்ளாத எம்மவர்கள் கஞ்சா வளர்த்து நாட்டை மீட்க முடியும் என நினைப்பது எவ்வாறான கீழ்த்தரமான மனநிலையின் வெளிப்பாடு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.
70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டவரிடம் இருந்து நாம் விடுதலையை பெற்றுக்கொண்ட போதிலும், இன்று எமது வளங்களை அவர்களுக்கே விற்று மீண்டும் அடிமைகளாக நினைக்கின்றோம். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இறுதியாக இந்த பாராளுமன்றமும் 225 உறுப்பினர்களும் மட்டுமே இலங்கைக்கென எஞ்சியிருக்கும் நிலைமை ஏற்படும். அதற்கு பதிலாக இந்த பாராளுமன்றத்தையும் வெள்ளையர்களுக்கே கொடுத்துவிட்டால் அனைத்தையும் அவர்களே கையாள்வார்கள். ஆனால் அவ்வாறான நிலையேற்பட்டால் எமக்கு சுதந்திரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்த நாட்டை ஊழல் இல்லாத நாடாக வெள்ளையர்கள் மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.