Our Feeds


Thursday, November 17, 2022

ShortNews Admin

VIDEO: இஸ்லாம் பாடப்புத்தக விநியோக விவகாரம் குறித்து பொய் பிரசாரம் மேற்கொள்வதை நிறுத்தாவிட்டால் நடவடிக்கை - ஞானசார தேரருக்கு ஆதரவான இணையதளத்திற்கு கல்வி அமைச்சர் எச்சரிக்கை



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


திருத்தப்பட்ட இஸ்லாம் பாட அச்சுப்புத்தகங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டுவரும் செய்தி இணையத்தளம், அந்த நடவடிக்கையை நிறுத்தாவிட்டால், பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைப்பேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ 17) சிறப்புரிமை மீறள் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

2022ஆம் ஆண்டுக்கான இஸ்லாம் பாடப்புத்தகம் உரிய காலத்தில் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

என்றாலும், நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய தரம் 6 இல் இருந்து தரம் 11 வரையான குறித்த அச்சுப்புத்தகங்கள் மீள பெறப்பட்டு, அதில்  ஒருசில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இது தொடர்பில் இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் அறிந்த குழுவொன்றினால் இந்த விடயங்கள் ஆராயப்பட்டு, மிகவும் குறுகிய, ஒருசில வசனங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அச்சிட்டு வைக்கப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போது, மிக விரைவாக அந்த அச்சுப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதாக நான் தெரிவித்திருந்தேன். 

அதன் பிரகாரம், இஸ்லாம் பாட புத்தகங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அனைத்து மதங்களின் இணக்கப்பாட்டுடன் அச்சிடப்பட்ட அந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு எந்தவித அநீதியும் ஏற்படாமல் விநியோகிக்கப்படும்போது, மத அடிப்படைவாத புத்தகங்களை விநியோகிப்பதற்கு நான் அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

மாணவர்கள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முகங்கொடுக்க இருப்பதால், அந்த புத்தகங்களை விரைவாக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக நான் ஏற்கனவே சபைக்கு தெரிவித்திருந்தேன். அதனையே நான் செய்தேன்.

எனவே, இந்த பொய் பிரசாரம் மேற்கொள்வதை குறித்த இணையத்தளம் நிறுத்தாவிட்டால், சிறப்புரிமை குழுவுக்கு அந்த இணையத்தளத்தை அழைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »