Our Feeds


Saturday, November 26, 2022

ShortNews Admin

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கில் முன்னுக்கு பின் முரணாக சாட்சியமளிக்கும் முதல் சாட்சியாளர் - நேரில் கண்காணிக்க வந்த UN, EU & பிரித்தானிய தூதரக அதிகாரிகள்



(எம்.எப்.எம்.பஸீர்)


பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளராக அடையாளப்படுத்தப்படும்  புத்தளம், அல் சுஹைரியா மதரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும்  மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக் முன்னுக்கு பின் முரணாக சாட்சியமளிப்பது தொடர்பில்  நீதிமன்றின் அவதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. 

வெள்ளிக்கிழமை (25) புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந் நிலைமை அவதானிக்கப்பட்டதுடன், சாட்சியாளரின் பரஸ்பர வேறுபட்ட நிலைப்பாடுகள், பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணிகளால் பதிவும் செய்யப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு 25ம் திகதி  நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில்   விசாரணைக்கு வந்தது.

அன்றைய தினம், பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  2ம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

முதல் பிரதிவாதியான  சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

2ம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்

இவ்வழக்கினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேடமாக மேற்பார்வைச் செய்யும் நிலையில் அதற்காக பிரத்தியேக சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வாவுடன் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம மற்றும் அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ் ஆகியோர் ஆஜராகினர்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க  ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், 'இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.' என  கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைவிட,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நடந்த விசாரணைகளின் போது 2ம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, சாட்சியாளரை குறுக்கு விசாரணை செய்தார்.

இதன்போது, இதுவரையில் சாட்சியங்களில் வெளிப்படுத்தப்படாத ஒரு விடயம் வெளிப்படுத்தப்பட்டது.  இதுவரை முதல் சாட்சியாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 2020 ஏப்ரல் 20ம் திகதி பெற்ற வாக்கு மூலமே முதல் வாக்கு மூலம் என கருதப்பட்ட நிலையில்,  குறுக்கு விசாரணைகளின் போது குறித்த சாட்சியாளர் அதற்கு முன்னதாகவே 2020 மார்ச் 20ம் திகதி வாக்கு மூலம் ஒன்றினை சி.ஐ.டி.க்கு வழங்கியதாக சாட்சிக் கூண்டிலிருந்து தெரிவித்தார்.

அதனை மேலும் உறுதி செய்யும் விதமாக  இந்த விவகாரத்துடன் தொடர்புடைய பிரிதொரு விசாரணை நடவடிக்கையை முன்னெடுத்த சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு முதல் சாட்சியாளர் வழங்கியுள்ள வாக்கு மூலத்திலும் அதனை குறிப்பிட்டுள்ளமையை நீதிபதி நதீ அப்ரனா சுவந்துருகொடவும் அவதானித்து பதிவு செய்தார்.

இந்நிலையில் முதல் பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சி.ஐ.டி.யினரால் மறைக்கப்பட்ட குறித்த மார்ச் 20 வாக்கு மூலம் மன்றில் தாக்கல்ச் செய்யப்படல் வேண்டும் எனவும், அதன் உள்ளடக்கம் குறித்து ஆராய்ந்து பிரதிவாதிகளுக்கு குறுக்கு விசாரணை செய்ய நியாயமான சந்தர்ப்பம் வேண்டும் எனவும் கோரினார். 

இதற்கு முன்னர்  கடந்த 2020 ஏப்ரல் 21ம் திகதி வழங்கப்பட்ட வாக்கு மூலமும் மறைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் நீதிமன்ற உத்தரவூடாகவே அது வெளிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவும் ஆமோதித்து  அந்த வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள நீதிமன்ற உத்தரவொன்றினை பிறப்பிக்க கோரினார்.

இதன்போது பதிலளித்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா,  தம்மிடம் உள்ள எல்லா ஆவணங்களையும் பிரதிவாதிகளுக்கு கையளித்துள்ளதாகவும்,  2020 மார்ச் 30 ஆம் திகதி வாக்கு மூலம் ஒன்று அளிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் தேடிப் பார்த்து அறிக்கையிட சி.ஐ.டி.யின் பணிப்பாளருக்கு உத்தரவிட முடியும் எனவும் கூறினார்.

விடயங்களை ஆராய்ந்த  நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட, கடந்த 2020 மார்ச் 20ம் திகதி முதல் சாட்சியாளர் சி.ஐ.டி.க்கு ஏதேனும் ஒரு வாக்கு மூலம் அளித்திருப்பின் அது குறித்த அனைத்து விடயங்களையும் மன்றில் அடுத்த தவணை சமர்ப்பிக்க வேண்டும் என சி.ஐ.டி. பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

இந் நிலையில் சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்து முதல் சார்ட்சியாளர் தொடர்ந்து சாட்சியமளித்தார்.

இதன்போது, சாட்சியாளர் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸாவிலிருந்து தப்பியோடியமை தொடர்பில் அளித்த அடிப்படை சாட்சியம் தொடர்பில் நீண்ட குறுக்கு விசாரணைகள் செய்யப்பட்டன. இதன்போது ஏற்கனவே சாட்சியம் அளித்ததன் பிரகாரம், அவர் மதரஸா பாடசாலையிலிருந்து தப்பியோடியதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலங்களில், தப்பிச் செல்ல முயன்று அது முடியாமல் போனதாக குறிப்பிட்டுள்ளமையும், தப்பிச் சென்றதாக சாட்சியத்தின் போது குறிப்பிட்ட  காலப்பகுதி அதனுடன் பொருந்தாமையும்  வெளிப்படுத்தப்பட்டு, பரஸ்பர வேறுபாடுகளாக நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது.

இதனைவிட, இதுவரையிலான சாட்சியங்களில் கூறப்பட்ட விடயங்களை விட, மேலதிகமாக பல தடவைகள் முதல் சாட்சியாளர் சி.ஐ.டி.யிடம், வாக்கு மூலமளித்துள்ளமை தொடர்பிலும்  குறுக்கு விசாரணைகளில் வெளிப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 2020 மே 12ம் திகதி கோட்டை நீதிவானுக்கு வழங்கப்பட்ட இரகசிய வாக்கு மூலத்தை மையப்படுத்தி குறுக்கு கேள்விகள் தொடுக்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த முதல் சாட்சியாளர், 2020 ஏப்ரல் 11ம் திகதி இரவு தனது தாயாருக்கு அழைப்பெடுத்த சி.ஐ.டி., மறு நாள் காலையில் பச்சை நிற வேன் ஒன்றினை மினுவாங்கொடையில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறினார். அங்கிருந்து சி.ஐ.டி. க்கு சென்றதாகவும், சி.ஐ.டி.யில் தனக்கும் தனது தாய்க்கும் உணவு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட சாட்சியாளர், அதன் போது அவர்களுடன் சி.ஐ.டி. அதிகாரிகள் பலர் கலந்துரையாடியதாகவும் கூறினார்.

மேலதிக குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்த சாட்சியாளர், நீதிவானிடன் இரகசிய வாக்கு மூலம் அளிக்க தான் ஒரு போதும் கோரவில்லை எனவும், சி.ஐ.டி.யினர் தன்னிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமையவே அவ்வாக்கு மூலத்தை  வழங்கியதாகவும், அதற்காக சி.ஐ.டி.யில் இருந்தே தான் சென்றதாகவும்  சாட்சியமளித்து குறிப்பிட்டார்.

இதனைவிட, வழக்கின் முதலாம் பிரதிவாதியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை அடையாளம் காட்ட, விசாரணை அதிகாரிகள் புகைப்படங்களைக் காட்டி முன்னெடுத்த முயற்சிகள் தொடர்பிலும், இதன்போது முதல் சாட்சியாளர் வெளிப்படுத்தினார்.

குறுக்கு விசாரணைகளிடையே, பல தடவைகள்,  வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால்கள் இருவரும்  பல  குறுக்குக் கேள்விகள் தொடர்பில் ஆட்சேபனம் வெளியிட்ட போதும் அவை நீதிபதியால் நிராகரிக்கப்பட்டு,  கேள்விகளை தொடுக்க பிரதிவாதி தரப்புக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இதனைவிட, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கும்,  வழக்குத் தொடுநர் தரப்பின் சட்டவாதிகளுக்கும் இடையே  மன்றில் கடும் ஆக்ரோஷமான  வாக்கு வாதங்களும் மூண்டன.

இந்நிலையில் மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக இவ்வழக்கானது எதிர்வரும்  2023 ஜனவரி மாதம் 23ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்த திகதிக்கு மேலதிகமாக 2023 மார்ச் 27, 28 ஆம் திகதிகளிலும் அவ்வழக்கு விசாரணை இடம்பெறும் என நீதிபதி  அறிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »