(இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் உள்ள அமைச்சுக்கள் வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பவித்ரா தேவி வன்னியாராச்சி, சி.பி ரத்நாயக்க, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 14 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் உள்ள அமைச்சுக்கள் வழங்குமாறு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தினார்,இருப்பினும் தற்காலிக அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.
சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையறுக்கப்பட்ட அமைச்சுக்களை உள்ளடக்கிய வகையில் தற்காலிக அமைச்சரவையை ஸ்தாபித்தார். சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்த காரணத்தால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம் தோல்வியடைந்தது.
இவ்வாறான பின்னணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தியது, இருப்பினும் நிலையான அமைச்சரவையை இதுவரை நியமிக்கவில்லை.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 14ம் திகதி ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நிலையான அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான பவித்ரா தேவி வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
நிலையான அமைச்சரவையில் சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.