Our Feeds


Tuesday, November 8, 2022

ShortNews Admin

ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் அமைச்சுப் பதவிகளுக்காக அதிகாரப் போராட்டம் - போட்டுடைத்தார் SLPP, MP சன்ன ஜயசுமன.



(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திற்குள் உள்ளக அதிகார போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுஜன பெரமுனவினர் சிலருக்கு அமைச்சுக்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவிக்காத நிலையில், அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடுகளில் குறித்த தரப்பினர் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இந்நிலைமையை சமநிலைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்.

எனினும் அவரது முயற்சியின் வெற்றியை வரவு - செலவு திட்ட வாக்கெடுப்பின் போது தெரிந்து கொள்ள முடியும் என்றும் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எல்லை நிர்ணயத்திற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் உள்ளுராட்சி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றமை தெளிவாகிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோல்வியடையச் செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.

சுதந்திர மக்கள் சபையின் ஒருங்கிணைப்பின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதன் முதற்படியாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிசினுடைய தலைமையில் சட்டத்தரணிகள் குழுவினால் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை நீதிமன்றத்தின் ஊடாக தோல்வியடையச் செய்வதற்கான, சட்ட நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்போம்.

அத்தோடு நீதிமன்றத்திற்கு அப்பால் பொது மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதோடு , அவர்களை ஒன்றிணைந்து மக்கள் சக்தியொன்றையும் உருவாக்குவோம்.

அரசாங்கத்திற்குள் உள்ளக அதிகார போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பிரபல குழுவினருக்கு , அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இணக்கம் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. எனவே இவ்வாறானவர்கள் அரசாங்கத்தை உள்ளக ரீதியில் அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

இதே வேளை மறுபுறம் , எதிர்க்கட்சியிலுள்ள சிலரை அரசாங்கத்திற்குள் உள்வாங்குவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார். அத்தோடு மேற்கூறப்பட்ட தரப்பினருக்கு அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டால் , பிரிதொரு தரப்பினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர். 

இதே போன்று எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ளவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கினால் , தற்போது அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலைமையை சமநிலைப்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். வரவு - செலவு திட்ட வாக்கெடுப்பின் போது ஜனாதிபதியின் முயற்சி எந்தளவிற்கு வெற்றியளித்துள்ள என்பதைப் பார்க்க முடியும். 

இவற்றுக்கு மத்தியிலேயே தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இரண்டு முயற்சிகளினதும் விளைவாக இறுதியில் இரு தேர்தல்களையும் நடத்த வேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்படும். அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலைமையே இதன் மூலம் வெளிப்படுகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »