Our Feeds


Wednesday, November 30, 2022

ShortNews Admin

#SHORT_BREAKING: கோட்டா & மஹிந்தவின் 05 உத்தியோகபூர்வ பயணங்களுக்கு 447 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை செலவு: RTI இல் அம்பலம்



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மேற்கொண்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் மாத்திரம் 2021 ஆம் ஆண்டு அரசுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகியுள்ளது.


தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு இணங்க – ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.


மேற்படி ராஜபக்ஷ சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 447 லட்சத்து 39 ஆயிரத்து 184 ரூபா 91 சதம் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) 2022 ஜனவரி 1ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு, சமர்ப்பிக்கப்பட்ட உரிய விவரங்கள் கோரிய விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்டது.


இருந்தபோதிலும், இது தொடர்பான மேல்முறையீட்டை பரிசீலித்த இலங்கை தகவல் உரிமை ஆணைக்குழு, கோரப்பட்ட விவரங்களை ஊடகவியலாளர்களிடம் வழங்குமாறு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வேலை நாட்கள் அல்லது 21 நாட்களுக்குள் விவரங்களை அலுவலகங்கள் வழங்க வேண்டும் என்கிற போதிலும், மேற்படி தகவல்களை வழங்க அவர்கள் பத்து மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.


கிடைத்த விவரங்களின்படி, 44 மில்லியன் ரூபாவில் 36 மில்லியன் (36, 970,864.14) ரூபாவை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வெளிநாட்டு பயணங்களுக்குச் செலவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – மூன்று உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களுக்கு 07 மில்லியன்ழூரூபாவை செலவு செய்துள்ளார்.


அந்த வகையில், 44 மில்லியன் ரூபாவில் 83 சதவீதமான பணம், முன்னாள் பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – நியூயோர்க் (அமெரிக்கா), கிளாஸ்கோ (இங்கிலாந்து) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக ரூபா 77 லட்சத்து 68 ஆயிரத்து 320 ரூபா 77 சதத்தை செலவிட்டுள்ளார்.


இருந்தபோதிலும், இந்த விஜயங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.


நியூயோர்க் வருகைக்கு 54 லட்சத்து 61 ஆயிரத்து 221 ரூபா 71 சதமும், கிளாஸ்கோ வருகைக்கு ரூ. 17லட்சத்து 85 ஆயிரத்து 210 ரூபா 42 சதமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான அவரது விஜயத்துக்காக 05 லட்சத்து 21 ஆயிரத்து 888 ரூபா 68 சதமும் செலவிடப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஷேக் முகர்ஜி ரகுமானின் பிறந்தநாளில் கலந்துகொள்வதற்காக மார்ச் 19, 2021 அன்று பங்களாதேஷுக்கு விஜயம் செய்ததற்காக 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான (10,568,962.53) தொகையை செலவிட்டுள்ளார்.


செப்டம்பர் 10, 2021 அன்று G20 சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இத்தாலிக்கு மேற்கொண்ட விஜயத்துக்காக 26 மில்லியன் ரூபா (ரூபா 26,401,901.61 ) செலவிட்டார். இத்தாலியில் நடந்த மாநாட்டில் அவரின் குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துகொண்டனர்.


முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இத்தாலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு உண்பது போன்ற புகைப்படத்தை ஒரு ஊடக இணையதளம் வெளியிட்டிருந்தது. இது அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒப்பிடும் போது, ​​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதற்குக் காரணம் முன்னாள் பிரதமருடன் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் இதன்போது வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தனர்.


தமிழ் கார்டியன் வெளியிட்டிருந்த படத்தில் இத்தாலியில் உணவு உண்டு மகிழ்ந்தவர்களில் மஹிந்த, அவரது மனைவி, அவரது மகன், அவரது மருமகன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் காணப்பட்டனர்.


நடைமுறையின்படி, பிரதமர் வெளிநாட்டில் இருக்கும்போது பிரதமரின் செயலாளர் நாட்டில் கடமையில் இருக்க வேண்டும். இது வெளியுறவு அமைச்சரின் செயலருக்கும் பொருந்தும். எனினும் இத்தாலிய பயணத்தின் போது செனரத் பிரதமருடன் சென்றிருந்த அதேவேளை கொலம்பகேவும் வெளிவிவகார அமைச்சருடன் சென்றிருந்தார். இரு செயலாளர்களும் ஏன் இத்தாலியில் இருந்தனர் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


நாடு கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட ஒரு முக்கியமான தருணத்தில், நாட்டின் தலைவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளிநாட்டு பயணங்களுக்கு பொது நிதியைப் பயன்படுத்தியது மிகவும் கவலைக்குரியது.


இவ்வாறான வெளிநாட்டு விஜயங்களுக்கு அதிகப்படியான பணத்தை செலவிட்டமையானது, நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »