Our Feeds


Tuesday, November 8, 2022

Anonymous

மக்கள் வயிற்றில் அடி விழுமா அல்லது தலையில் இடி விழுமா என்ற அச்சத்தில் உள்ளனர் - உதயகுமார் MP காட்டம்.

 



இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு - பல்வேறு தரப்பு மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளனர். இலங்கையில் வாழும் மொத்த சனத்தொகையில் 57 லட்சம் பேருக்கு உணவுக்கான உதவி - தேவை என ஐநா அறிக்கை கூறுகிறது.


இதில் கணிசமானவர்கள் மலையக  பகுதிகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது பிழையில்லை. ஆதனால், பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மலையக மக்களினுடைய நிலைமை இன்னும் ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்கிறது.


உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை இதற்கான முக்கிய காரணமாகும்.


மலையக மக்கள் உழைப்பு ரீதியாக பெருந்தோட்ட கம்பெனிகளால் பாரியளவு சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய வருமானத்தை அதிகரிக்க பாடுபடும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை நியாயமான முறையில் வழங்குவதற்கு தவறி வருகின்றனர்.


இதன் காரணமாக பெருந்தோட்ட மலையகப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முறையான சுகாதார, கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இன்று நாட்டில் பாரியளவு  வரிகள் அதிகரிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் கட்டணம்,நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.


எனவே, இந்த  அதிகரிப்புக்கு மத்தியில் தங்களுடைய வாழ்வாதாரத்தை முன் கொண்டு செல்ல முடியாத நிலை நாட்டு மக்கள் உட்ப்பட மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 


எனவே, இந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ள இந்த மலையை மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக விசேட நிவாரண திட்டம முன்னெடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.


அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மலையக மக்களை அரசியல் ரீதியாகவும் பின்தள்ள சதித்திட்டங்கள்  முன்டுனேடுக்கப்படுகின்றதா?  என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தற்போது எல்லை நிர்ணய சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த சபைக்கு முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்களை நாங்கள் உற்று நோக்கினால் பெரும்பான்மை மக்கள் சார்பாக இருவரும், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்காக ஒருவரும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் சார்பில் பேசுவதற்காக ஒருவரும், இந்த குழுவிலே நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் வடக்கு கிழக்குக்கு வெளியே சுமார் 15 லட்சம் மக்களைக் கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுடைய நலன்கள் தொடர்பில் பேசுவதற்கு இந்த குழுவிலே ஒருவர் கூட நியமிக்கப்படாமை மிகவும் வருத்தம் தரக்கூடிய விடயமாக இருக்கிறது.


குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் அதிகளாவான மக்கள் தொகை கொண்ட பிரதேச சபைகளும், பிரதேச செயலகங்களும், அதிக மக்கள் தொகை கொண்ட கிராம சேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றனர்.


அதிக மக்கள் தொகை கொண்ட கிராம சேவகர் பிரிவுகளை முறையாக எல்லை நிர்ணயம் செய்து  - இந்த நாட்டிலே ஏனைய பகுதிகளில் இருக்கின்ற கிராம சேவகர் பிரிவுகளை போன்று -  நியாயமான மக்கள் தொகையுடன் கிராம சேவகர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.


அப்போதுதான், இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நிவாரண திட்டங்கள், சமூர்த்தி போன்ற அனைத்தையும் முறையாக பெற்றுக் கொடுக்க முடியும்.


அதிக கிராம சேவைகள் பிரிவுகள் இல்லாமையும், -  ஒவ்வொரு கிராம சேவர் பிரிவுகளிலும் அதிகளவான மக்கள் தொகை காணப்படுவதும் -    சமுர்த்தி கொடுப்பன்வு நியாயமாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சமுர்த்தி கொடுப்பனவு பெற வேண்டியவர்கள் பலர் அந்த கொடுப்பனவினை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


எனவே, இந்த எல்லை நிர்ணய குழுவில் மலையக மக்கள் ஒருவர் நிச்சயமாக நியமிக்கப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி இந்த நாட்டை புதிய பாதைக்கு இட்டு செல்வார் என்ற நம்பிக்கை இருந்த போதும் -  அவரும் பழைய ஆட்சியாளர்கள் போன்று எந்த விதமான முன்னேற்றகரமும் இல்லாத பயணத்தை சென்று கொண்டிருக்கிறார்.


எரிபொருள் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை, எரிவாயு பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை, மெது மெதுவாக விலையை குறைத்து - தற்போது மீண்டும் விலையை அதிகரிக்க தொடங்கி உள்ளனர்.


எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது -  ஏற்கனவே எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களினுடைய வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


அரசாங்கம் தற்போது மீண்டும் பணம் அச்சிடும் படலத்தை ஆரம்பித்துள்ளது. அதனால், பணவீக்கம் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த வாரம் வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கபடவுள்ளது. இதில் மக்கள் வயிற்றில் அடி விழுமா அல்லது தலையில் இடி விழுமா என்ற அச்சத்தில் உள்ளனர்


சர்வதேச நாணய நிதியத்தில் கடன் கோரிக்கை முன்வைத்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது இதுவரை ஒரு டொலர் கூட இலங்கைக்கு வந்து சேரவில்லை. பேச்சுவார்த்தை - பேச்சுவார்த்தை 


ஆனால், எதுவும் நடந்த பாடில்லை. வெளிநாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாக இலங்கை அறிவித்த பின்னர் தற்போது கடன் மறு சீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் கலந்துரையாடுவது எந்த அளவு சாத்தியப்படும் என்பதை கூற முடியாது.


அதனால், இந்த நாட்டினுடைய எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே செல்கிறது. இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் நிலையான ஸ்திரமான நிர்வாகம் அரசாங்கம் ஒன்றை இந்த நாட்டில் ஏற்படுத்தும் -  போதுதான் வெளிநாடுகள் நம் மீதான நம்பிக்கை கொண்டு - உதவி செய்ய முன் வருவார்கள். 


அப்போது ஸ்திரமான நாடாக முன்னோக்கி செல்ல முடியும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »