முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவரை உடனடியாக நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
”சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் அண்மையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்.
அவரை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் எம்.பி. பெரேரா ஆகியோர் சந்தித்தனர்.
அன்று பசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றபோது தடுத்துநிறுத்தப்பட்டார். இன்று காவல்துறையுடன் தொடர்புடையவர்கள் நேரில் சென்று அவருக்கு வரவேற்பளிக்கின்றனர்.
இவ்வாறான விடயங்கள் நடக்கும்போது, ஆணைக்குழுக்கள் எவ்வாறு சுயாதீனமாக இயங்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே குறித்த இருவரும் உடனடியாக பொலிஸ் ஆணைக்குழுவிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தற்போது ஆணைக்குழுக்களின் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்.