Our Feeds


Tuesday, November 29, 2022

ShortNews Admin

அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வது உறுதி - ஆளும் கட்சி MP - GL பீரிஸ் அதிரடி




(எம்.மனோசித்ரா)


அரசாங்கத்தை தேர்தல் அச்சம் சூழ்ந்து கொண்டுள்ளது. அதன் காரணமாகவே பல்வேறு காரணிகளைக் காண்பித்து தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

2023 பெப்ரவரி 27 க்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாவிட்டால் , நாம் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தை தேர்தல் அச்சம் சூழ்ந்துள்ளது. அதன் காரணமாகவே பல்வேறு சதித்திட்டங்கள் மூலம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டில் 10 சதவீதத்திற்கும் குறைவானோரே இந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

டிசம்பர் 8 ஆம் திகதி வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பின் பின்னர் சட்டமூலமொன்றை கொண்டு வந்து உள்ளுராட்சி தேர்தலைக் காலம் தாழ்த்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

பிரேம் சி தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட சட்ட மூலமே இவ்வாறு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை.

எனினும் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கத்திற்காக இதனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

2023 மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்கு பெப்ரவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறு குறித்த திகதிக்குள் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாம் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம். அதிகார பகிர்வு, வடக்கு - கிழக்கு மக்களின் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் , வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் சர்வகட்சி சம்மேளனத்தை ஸ்தாபிப்பதற்கும் ஜனாதிபதி தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உண்மையில் அவர் மக்களுக்கான தீர்வினை வழங்க விரும்பினால் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »