முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக முன்னாள் நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் கௌரவ அஷ்-ஷேஹ் அர்க்கம் நூறாமித் அவர்களின் அறிக்கைக்கக்கு அமைவாக, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தாயாரிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதற்கான கோரிக்கையை அரசுக்கு முன்வைப்பதாக #strengthenMMDA அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி #strengthenMMDA என்கின்ற எங்களுடைய அமைப்பானது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றைச் செய்வதற்கு கௌரவ நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களை நீதி அமைச்சில் சந்தித்தபோது,
இந்தச் சட்டத் திருத்தத்திற்கான பரிந்துரைகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளையும் மார்க்க அறிஞர்களையும் உள்ளடக்கிய குழுவினரால் செய்யப்பட்டிருக்கின்றது என்றும் ஒரு பௌத்தராக என்னால் அந்த பரிந்துரைகளில் எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது எனவும் இருந்த போதும் உங்களது வேண்டுகோளைப் பரிசீலிக்கின்றேன் என்றும் நீதி அமைச்சர் கூறியிருந்தார்.
ஆனால் Shortnews ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றினை வழங்கியிருக்கின்ற முன்னாள் நீதி அமைச்சரினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவினுடைய உறுப்பினரும் ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளருமான கௌரவ ஷேக் அர்க்கம் நூறாமித் அவர்கள் குறித்த ஆலோசனைக் குழுவானது மிகவும் இனவாதப் போக்குடைய அரசாங்கம் ஒன்றில் அமைக்கப்பட்டது என்றும், அந்த அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டதாகவே ஆலோசனைக் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்றும், இன்று சர்ச்சைக்குரிய பேசு பொருளாக இருக்கின்ற விடயங்கள் பற்றி சுதந்திரமாக முடிவெடுக்கின்ற உரிமை அந்தக் குழுவிற்கு வழங்கப்படவில்லை என்றும் அவை தொடர்பான தீர்மானங்கள் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டு அந்தத் தீர்மானங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டிய நிலைமைக்கு ஆலோசனைக் குழுவானது நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் கூறி இருக்கின்றார்.
அவருடைய கூற்றின்படி பார்க்கின்ற போது முன்னாள் நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற பரிந்துரைகள் குழுவினால் சுயாதீனமாக, சமூகத்தின் நன்மையை மாத்திரம் கருத்திற்கொண்டு செய்யப்படவில்லை என்பதும் சில தீர்மானங்கள் அவர்களின் மீது திணிக்கப்பட்டு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட முன்மொழிவுகளே அவை என்பதும் தெளிவாகின்றது.
எனவே மார்க்க விதிமுறைகளுக்கு முரணான பரிந்துரைகளை உள்ளடக்கி இருக்கின்ற மேலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்குப் பாதிப்பாக இருக்கின்ற பரிந்துரைகளையும் உள்ளடக்கி இருக்கின்ற இந்த அறிக்கையானது எமது சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளாலும் மார்க்க அறிஞர்களாலும் சுயாதீனமாக முன்மொழியப்பட்ட ஒரு அறிக்கை அல்ல என்பதை #strengthenMMDA அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
அத்தோடு நிர்ப்பந்தங்களின் அடிப்படையிலே தீர்மானங்கள் எட்டப்பட்டு அந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் செய்யப்பட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தப்படுவதானது ஜனநாயகத்திற்கு முரணானது என்பதையும் #strengthenMMDA அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
இதன் அடிப்படையில் குறித்த அறிக்கைக்கு அமைவாக சட்ட திருத்தம் செய்கின்ற முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் இனவாதப் போக்குடைய அரசாங்கத்தின் கெடுபிடிக்குள் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவானது உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை #strengthenMMDA அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் இருக்கின்ற எமது முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவசரமாக இந்த விடயத்தை நீதி அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் எத்தி வைத்து குறித்த அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் திருத்தப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும் #strengthenMMDA அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.