மெக்ஸிகோவுக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (நவ. 27) இரவு நடைபெற்ற மிக முக்கியமான சி குழு போட்டியில் லயனல் மெஸி தனக்கே உரித்தான அற்புதமான ஆற்றலைக் கொண்டு போட்ட கொலின் உதவியுடன் 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிகவும் அவசியமான வெற்றியை ஆர்ஜன்டீனா ஈட்டிக்கொண்டது.
இந்த வெற்றியுடன் கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஆர்ஜன்டீனா இப்போதைக்கு தக்கவைத்துக்கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவுடனான ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்தால் 16 அணிகளைக் கொண்ட நொக் அவுட் சுற்றுக்கு செல்லமுடியாமல் முதல் சுற்றுடன் நாடு திரும்ப வேண்டிவரும் என்பதை மெஸி தலைமையிலான ஆர்ஜன்டீனா நன்கு அறிந்திருந்தது.
அத்தகைய ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், ஆர்ஜன்டீனாவை பதற்றத்தில் ஆழ்த்தும் வகையில் மெக்ஸிகோ கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திய வண்ணம் இருந்தது.
இரண்டு அணிகளினதும் வீரர்கள் சற்று முரட்டுத்தனமாக விளையாடியதால் பல சந்தர்ப்பங்களில் மத்தியஸ்தர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி எச்சரிக்க நெரிட்டது.
முதலாவது பகுதியில் இரண்டு அணிகளாலும் கோல் போட முடியாமல் போனது.
இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டதுடன் மீண்டும் ஆக்ரோஷமும் முரட்டுத்தனமும் வெளிப்பட்டன.
எவ்வாறாயினும் இடைவேளையின் பின்னர் ஆர்ஜன்டீனா சிறப்பான ஆடடத்திறனை வெளிப்படுத்தி மெக்ஸிகோவின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.
அதன் பலனாக 64ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா முதலாவது கோலைப் போட்டு அசத்தியது.
ஏஞ்சலோ டி மரியா பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட லயனல் மெஸி, பெனல்டி எல்லைக்கு வெளியில் இருந்து இடதுகாலால் பலமாக உதைத்து அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார்.
இந்த கோலினால் ஆர்ஜன்டீனா உற்சாகம் அடைந்ததுடன் மெக்ஸிகோ அதிர்ச்சிக்குள்ளாகி கோல் நிலையை சமப்படுத்த முயற்சித்தது. ஆனால், அதன் முயற்சிகளை ஆர்ஜன்டீன வீரர்கள் தடுத்த வண்ணம் இருந்தனர்.
போட்டி முழு நேரத்ததைத் தொடுவதற்கு 3 நிமிடங்கள் இருந்தபோது கோர்ணர் கிக் மூலம் பந்தைப் பெற்றுக்கொண்ட லயனல் மெஸி, அதனை என்ஸே பெர்னாண்டஸுக்கு பரிமாறினார். பெனல்டி எல்லைக்குள் இடது புறத்தில் இருந்த பெர்னாண்டஸ் பந்தை வேமாக உதைக்க பந்து கோலின் வலது மேல் மூலைக்குள் புகுந்தது. (ஆர்ஜன்டீனா 2 - 0)
இதனைத் தொடர்ந்து உபாதையீடு நேரம் உட்பட ஆட்டம் 10 நிமிடங்களுக்கு தொடர இரண்டு அணிகளும் பதற்றத்துடன் விளையாடின. ஆர்ஜன்டீனா வெற்றியைத் தக்கவைக்க முயற்சித்த அதேவேளை கோல் நிலையை சமப்படுத்த மெக்சிகோ கடுமையாக முயற்சித்தது. இறுதியில் ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு செல்வதறகான தனது வாய்ப்பை உயிர்பெறச் செய்துகொண்டது.