டென்மார்க்குக்கு எதிராக ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில்
சனிக்கிழமை (26) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் எம்பாப்பே போட்ட 2 கோல்களின் உதவியுடன் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நடப்பு சம்பியன் பிரான்ஸ் முதலாவது அணியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகதிபெற்றது.ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டியின் முதலாவது பகுதியில் பிரான்ஸ் குறைந்தபட்சம் 6 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட அதேவேளை டென்மார்க்குக்கு கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பை தவறவிட்டது.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன.
போட்டியின் 61ஆவது நிமிடத்தில் ஹேர்னண்டெஸ் இடது புறத்திலிருந்து தாழ்வாக பரிமாறிய பந்தை மிக சாமர்த்தியமாக கிலியான் எம்பாப்பே கோலினுள் புகுத்தி பிரான்ஸை முன்னிலையில் இட்டார்.
ஆனால், சொற்ப நேரத்தில் டென்மார்க் போட்ட கோல் பிரான்ஸின் மகிழ்ச்சியை இல்லாமல் செய்தது.
போட்டியின் 68ஆவது நிமிடத்தில் எரிக்சனின் கோர்ணர் கிக் பந்தை தலையால் முட்டிய அண்டர்சன், பந்தை கோல் வாயிலை நோக்கி நகர்த்தினார். மிக வேகமாக செயற்பட்ட கிறிஸ்டென்சன் பலமாக தலையால் பந்தை முட்டி கோல் நிலையை டென்மார்க் சார்பாக சமப்படுத்தினார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி கோல் எண்ணிக்கையில் முந்துவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அடுத்த 17 நிமிடங்களில் அந்த முயற்சிகள் கைகூடாமல் போனது.
எவ்வாறாயினும் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் சிரேஷ்ட வீரர் கிறீஸ்மான் பரிமாறிய பந்தை எம்பாப்பே தனது தொடையால் தட்டி 2ஆவது கோலைப் போட்டு பிரான்ஸை மீண்டும் முன்னிலையில் இட்டார். அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது.
இந்த வெற்றியுடன் இரண்டாம் சுற்றல் விளையாட முதலாவது அணியாக பிரான்ஸ் தகுதிபெற்றது.
டென்மார்க்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி டி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக இராண்டாம் சுற்றில் விளையாட தகுதபெறும்.