\
நாளை (11) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெண்களை, வீடுகள் மற்றும் பயிற்சியற்ற துறைகளில் தொழிலுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு தொழில்களுக்குச் சென்ற பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்குச் சென்றவர்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா வீசாவில் சென்று வேலையின்றி இருப்பதாகவும், எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ இவர்களை பொறுப்பேற்க முன்வராததால், அவர்கள் தவறாக நடத்தப்படுவதாக இலங்கை தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ள நிலையில், சுற்றுலா வீசா மூலம் பயிற்சியற்ற தொழில்களுக்கு பெண்களை பரிந்துரைப்பதை தடை செய்யுமாறு தொழில் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.