Our Feeds


Thursday, November 17, 2022

ShortNews Admin

BREAKING: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த வசந்த முதலிகே, சிறிதம்ம தேரருக்கு விளக்கமறியல்



( எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் டி.என்.எல். மஹவத்த இன்று வியாழக்கிழமை (17) மாலை உத்தரவிட்டார்.  

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவ்விருவரும் இன்று மாலை 5.00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கொழும்பு மேலதிக  நீதிவான் நீதிமன்றில் ( 8 ஆம் இலக்கம்) ஆஜர்  செய்யப்பட்டுள்ளனர். இதன்போதே இதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய  மூவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.  

இந் நிலையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரோடு ஒன்றாக பயணித்த  ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம்,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலைய கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டு களனி வலய குற்ற விசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

கல்வெவ சிறிதம்ம தேரர்  தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத  தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்குமாறு பொலிஸ்  மா அதிபர் சந்தன விக்ரமரத்ன  கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி சி.ரி.ஐ.டி. முன்னெடுக்கும் விசாரணைகளில், இந்த மூன்று பேரும் அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து அவதானம் செலுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

தடுப்புக் காவலில் 65 நாட்களின் பின்னர் ஹசாந்த ஜீவந்த குணதிலக மட்டும் எந்த சாட்சியங்களும் இல்லை என விடுவிக்கப்ப்ட்டார்.

இந் நிலையில் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரின் 90 நாள் தடுப்புக் காவல் காலம் நாளை வெள்ளிக்கிழமையுடன் ( 18) நிறைவுக்கு வருகின்றது. 

இந் நிலையிலேயே இன்று ( 17) அவர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 இது குறித்து வீரகேசரிக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாக கூறினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »