Our Feeds


Thursday, November 10, 2022

RilmiFaleel

தனுஷ்க விடயத்தில் நடந்தது என்ன? பொலிஸ் அறிக்கை வெளியானது .


இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான பல தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.

மேலும், தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெண்ணொருவரினால் சுமத்தப்பட்டுள்ள பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான பொலிஸ் அறிக்கையின் தகவல்களை வெளியிடுவதற்கு சிட்னி நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்த விபரங்களை வெளியிட நியூஸ் கார்ப்பரேஷன், ஏ.பி.பி. , Sydney Morning Herald மற்றும் Channel 9 உட்பட பல ஊடகங்கள் அனுமதி கோரியிருந்தன.

குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்ணின் பாதுகாப்பிற்காகவும், அசௌகரியங்களை தடுக்கவும் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என சிட்னி பொலிஸார் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

தனுஷ்க குணதிலக்க காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிட்னியின் ரோஸ் பேயில் வசிக்கும் 29 வயதுடைய பெண்ணுடன் தனுஷ்க குணதிலக்க முதலில் ஒக்டோபர் 29 ஆம் திகதி Tinder எனும் இணையப் பயன்பாடு மூலம் தொடர்புகொண்டதாக நியூஸ்.காம் அவுஸ்திரேலியா இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது.

அதன்பிறகு, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அவர்களுக்கு இடையே உரையாடல் நடந்துள்ளது.

சிட்னி பொலிஸாரின் அறிக்கையின்படி, பிரிஸ்பேனில் தன்னை சந்திக்க வருமாறு தனுஷ்க கூறியதாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும், அதனால் அந்த பெண்ணை வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும், பின்னர் இருவரும் சிட்னியில் சந்திப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, நவம்பர் இரண்டாம் திகதி இரவு சுமார் 8.20 மணியளவில் சிட்னியில் உள்ள சர்குலர் குவேயில் உள்ள ஓபரா உணவகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.

நீதிமன்ற அறிக்கையின்படி, அவர்கள் உணவகத்தில் சுமார் அரை மணி நேரம் செலவிட்டுள்ளனர் மற்றும் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் பீட்சா உணவகம் ஒன்றிற்குச் சென்று இரவு உணவு அருந்திவிட்டு, குறித்த பெண்ணின் வீட்டிற்கு செல்வதற்காக பயணிகள் கப்பலில் ஏறுவதற்காக கப்பலுக்குச் சென்றதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கப்பல் வரும் வரை காத்திருந்து கப்பலில் தனுஷ்க வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக அவர் கூறியுள்ளார்.

சிட்னி பொலிசார் நீதிமன்றத்தில் அளித்த தகவலின் படி, வீட்டிற்கு வந்த உடனேயே தனுஷ்க அவருடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவசரப்பட வேண்டாம் என்று தனுஷ்கவிடம் கேட்ட போதும் தனுஷ்க அதனை மறுத்துவிட்டதாக சம்பந்தப்பட்ட பெண் கூறியுள்ளார்.

எனினும் தனுஷ்க தன்னுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்கவின் நடத்தையால் தாம் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளானதாக அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

அங்கு கடும் அதிர்ச்சிக்கு ஆளானதாகவும், கடும் குளிரில் சிக்கித் தவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ்க நள்ளிரவு 1 மணியளவில் வாடகை வாகனத்தை பெற்றுக்கொண்டு தனது வீட்டை விட்டு வெளியேறியதாகவும், மறுநாள் காலை எழுந்ததும் உடல் அசௌகரியம் காரணமாக வைத்திய ஆலோசனையை நாடியதாகவும் இந்த பெண் கூறியதாக கூறப்படுகிறது.

சிட்னியில் உள்ள பொண்டி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்ததாகவும், தனுஷ்கவுடன் பரிமாறப்பட்ட செய்திகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த தகவல்களை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் சிட்னியில் உள்ள ரோயல் பிரின்ஸ் எல்ஃபிரட் மருத்துவமனைக்குச் சென்று பாலியல் வன்கொடுமைப் பரிசோதனை மற்றும் மூளை ஸ்கேன் செய்து மூச்சுத் திணறலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துள்ளார்.

இன்று சிட்னி நீதிமன்றத்தில் ஒலி-ஒளி ஊடகம் மூலம் ஆஜரான தனுஷ்க, இந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டதை மறுக்கவில்லை.

எவ்வாறாயினும், தான் வன்முறையாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்ததாகவும், பாலியல் செயல்முறைக்கு அந்த பெண்ணுக்கு சம்மதம் இல்லை என்பதை மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

தனுஷ்க குணதிலக்க சார்பில் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், அடுத்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.

அதன்படி, அவர் அடுத்த 2 மாதங்களுக்கு காவலில் இருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அதற்கு முன்னதாகவே தனுஷ்கவின் சட்டத்தரணிகள் பிணை பெறுவதற்காக மற்றுமொரு பிணை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை தனுஷ்க குணதிலக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆனந்த அமரநாத்தை நீக்கிவிட்டு சிட்னியில் குற்ற வழக்குகளில் அனுபவம் உள்ள சாம் பரராஜசிங்கத்தின் சேவையை பெற்றுக்கொள்ள தனுஷ்க குணதிலக்க தரப்பு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, முறைப்பாட்டாளரின் ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் பல காரணிகளை கருத்திற்கொண்டு, தனுஷ்க குணதிலக இந்த வழக்கில் வெற்றி பெறுவார் என நம்புவதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவர் சானக சேனாரத்ன தெரிவித்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »