முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு உச்ச நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனுவை சமர்ப்பித்த தரப்பினர் இன்று (17) உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் நீதிபதிகள் காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான எம்.ஏ. சுமந்திரன், ஜெப்ரி அழகரத்தினம் மற்றும் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை குறிப்பிட எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்வரும் 24ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்தி அறிவிப்பதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.