Our Feeds


Saturday, November 19, 2022

News Editor

இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி?


 

பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான் கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த மாத இறுதியில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியை தொடங்கியது.

இந்த பேரணியில் பங்கேற்க கடந்த 3 ஆம் திகதி பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா பகுதிக்கு இம்ரான்கான் சென்ற போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனிடையே அரசுக்கு எதிரான இந்த பேரணியில் தான் மீண்டும் பங்கேற்க இருப்பதாக இம்ரான்கான் கூறிவரும் நிலையில் குறித்த பேரணி இந்த மாத இறுதியில் இஸ்லாமாபாத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இம்ரான் கான் கட்சியினரின் போராட்டத்தால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலையோர வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

மேலும் முன்னாள் பிரதமருக்கு எதிரான இந்த அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்துவது அரசின் பொறுப்பு எனவும் நீதிபதி வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பேரணிக்கு அனுமதி கோரி புதிய மனுவை இஸ்லாமாபாத் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இம்ரான்கானின் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »