எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற வெட்கமில்லையா என கேட்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்வரும் தேர்தலில் நாட்டை அழித்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மொட்டுவிற்கும் மக்கள் மறக்க முடியாத பதிலை வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு தேர்தலை ஒத்திவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் மக்கள் தேர்தலையே கோருகின்றனர் எனவும், எனவே ஒரு சிறந்த சமூகவாதியாக இருந்தால் தேர்தலை ஒத்திவைக்காமல் உடனடியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அரசாங்கத்தின் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் தாம் பங்குதாரராக வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நொச்சியாகம பிரதேசத்தில் அன்மையில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பத்தலேகொட ஆராய்ச்சி நிறுவனம் 11 வருடங்களில் 22 பருவ போக நெற்செய்கை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், நெற் செய்கைக்கு சேதன பசளைகளை மாத்திரம் பயன்படுத்தினால், நெற் செய்கையின் விளைச்சல் 21.5 இல் இருந்து 31 சதவீதமாக குறையும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல், நெல் விளைச்சலை அதிகபட்ச நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய முறையானது, நெற் செய்கைக்கு சேதன மற்றும் இரசாயன உரங்களின் கலவையிலான செய்கையே எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த தரவுகள் அனைத்தும் அரசியல்வாதிகளாலன்றி, இந்நாட்டின் புத்திஜீவிகளாலையே கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருந்தும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் இந்த அறிக்கைகளை புறக்கணித்து நெற் செய்கை, தேயிலைச் செய்கை மற்றும் பழ உற்பத்திச் செய்கை போன்ற அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்பட உரங்களை தடை செய்ததாகவும், இதன் மூலம் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் வாழ்வு பறிபோனதாகவும், இதனால் கடந்த பெரும் போக விளைச்சல் 50 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி கூறுவது போன்று 10,000 ரூபாவிற்கு அதிகபட்ச உரம் கிடைத்தாலும், அது ஒரு ஊடக அறிக்கையாக அல்லது ஜனாதிபதியின் உரையாக மட்டுமே உள்ளதாகவும், அது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகப் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெரும் வரலாற்றைக் கொண்டிருந்த எமது நாடு மொட்டுவினால் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு சேதம் விளைவித்த கட்சியையும் ராஜபக்சவையும் பாதுகாக்கும் நிலைக்கு தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் முன் வந்திருப்பதாகவும், இந்த அரசாங்கத்தை மக்கள் நிராகரிப்பதாகவும், எனவே உடனடியாக தேர்தலொன்றே தேவை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், மக்களின் அந்த ஜனநாயக உரிமைக்காக எதிர்க்கட்சி எந்நேரத்திலும் முன் நிற்பதாகவும் தெரிவித்தார்.