இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஆக்கபூர்வ திட்டங்களுக்குப் பதிலாக கொள்கை ரீதியான தத்துவார்த்த கட்டமைப்பையே காணக்கூடியதாக இருப்பதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும், இதில் பாராட்டத்தக்க சில உள்ளடக்கங்களும் இடம்பெற்றிருப்பதாக வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
விசேடமாக முதலீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும், புதிய நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் ஜனாதிபதி யோசனைகளை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே உள்ள பல நிறுவனங்களை ஒன்றிணைந்து இந்தப் புதிய நிறுவனம் கட்டமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 அரச திணைக்களங்கள், 214 அரச கூட்டுத்தாபனங்கள், 125 கூட்டமைப்பு அல்லாத அரச நிறுவனங்கள் உள்ள இந்த நாட்டில் ஒரே விடயத்திற்கான பல நிறுவனங்கள் செயற்படுகின்ற நிலையில் அவற்றை ஒன்றிணைக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம்.
அதேபோன்று அந்த நிறுவனங்களை தொழிநுட்ப கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளார்.
தொழிநுட்ப ரீதியாக அவை கட்டமைக்கப்படும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். ஏனென்றால் கடந்த 10 தொடக்கம் 20 வருடங்களில் அரச நிறுவனங்கள் தொழிநுட்பமயமாக்கப்பட்ட போது குறிப்பிடத்தக்க தொழிநுட்ப நிறுவனங்களே அதில் பங்களிப்பு வழங்கியிருந்தன.
இருப்பினும், தொழிநுட்பமயமாக்கலின் போது மிகவும் வருந்தத்தக்க வகையில் மோசடியான மற்றும் ஊழல் நிறைந்த செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக சர்வதேச ரீதியாக தேடப்பட்டு வரும் கடத்தல்காரர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எவ்வாறு இலங்கையில் கடவுச்சீட்டு கிடைத்தது என்று ஆராயப்பட வேண்டும்.
தொழினுட்ப ரீதியாக உள்ள சில முரண்பாடுகளே இதற்கு காரணமாக அமைகின்றன. தொழிநுட்ப பிரச்சினை குறித்து நாம் கவனம் செலுத்தும் அதேநேரம் இன்னும் சில குறைபாடுகளும் உள்ளன.
இலங்கைக்கு தரவுகளை வழங்கும் பிரதான 5 கம்பி வடங்கள் (Cables) உள்ளன. அந்த கம்பி வடங்கள் கொழும்பு கோட்டை, கல்கிசை மற்றும் மாத்தறை ஊடாகவே நாட்டுக்குள் வருகின்றன.
இலங்கைக்கு தரவுகளை வழங்கும் பிரதான 5 கம்பி வடங்கள் (Cables) உள்ளன. அந்த கம்பி வடங்கள் கொழும்பு கோட்டை, கல்கிசை மற்றும் மாத்தறை ஊடாகவே நாட்டுக்குள் வருகின்றன.
அவற்றை நீர்மூழ்கி கம்பி வடங்கள் (Submersible cables) என்று கூறுவோம். இந்த கட்டமைப்புகள் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமானவை. எனவே அந்த நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதன் ஊடாக பாரியளவில் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
சிறிலங்கா ரெலிகொம் ஏற்கனவே பகுதியளவு தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக எதனையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
49.2 சதவீத பங்குகள் மாத்திரமே திறைசேரிக்கு உரித்துடையதாக இருக்கின்றது. 44.5 சதவீதம் மலேசியாவின் மெக்ஸிஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கின்றது. வெறும் 6 சதவீதம் மாத்திரமே இலங்கை மக்களின் பங்குகளாக இருக்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஜுன் மாதமளவில் அப்போதைய வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, சிறிலங்கா டெலிகொம் திறந்த சந்தையில் பொது மக்களுக்கு பங்குகளை விற்பனை செய்கின்ற நிறுவனம் என்பதனால், முற்றுமுழுதான தனியார் நிறுவனத்திற்கு ஏதுவான உரிமைகளின் கீழ் செயற்படக் கூடிய அமைப்பு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு எந்த தேவையும் இல்லை. முற்றாக விற்பனை செய்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.
டெலிகொம் நிறுவனம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் மாத்திரம் 2040 கோடி ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது.
டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதன் ஊடாக மொபிடெல் சேவை, பியோ ரீ.வி. சேவை, சரண ரீ.வி, எஸ்.எல்.ரீ. டிஜிட்டல் சேவை, கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள மூன்றரை ஏக்கர் காணி, வெலிக்கடையில் ஏழு ஏக்கர் காணி, பாதுக்கையில் உள்ள செய்மதி தொடர்பு கோபுரங்கள் உள்ள 37 ஏக்கர் காணியும் விற்பனை செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பனை செய்வதன் ஊடாக இலங்கையில் இருந்து பரிமாற்றப்படும் தரவுகள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பு குறித்துப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும். அது தேசிய பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனிடையே, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் 1000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட இலாபத்தை ஈட்டியுள்ளது.
அந்த நிறுவனத்தை விற்பனை செய்வதன் ஊடாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், லங்கா ஹொஸ்பிட்டல் டயக்னோஸ்ரிக், லிட்ரோ எரிவாயு நிறுவனம், லிட்ரோ எரிவாயு பரிமாற்றல் மையம், கொன்வில் விருந்தகம், கொன்வில் விடுமுறை சுற்றுலா மையம், சினோர்லங்கா மற்றும் எயார் லங்கா விருந்தகங்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்யக்கூடிய அபாயம் இருக்கின்றது.
இந்தநிலையில், வரிவிதிப்புகளை விட பல அபாயகரமான விடயங்கள் நாட்டில் நடந்தேறியுள்ளன என்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.