Our Feeds


Sunday, November 27, 2022

News Editor

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின் கூற்று ஜனநாயகத்திற்கு விரோதமானது - ஹிருணிக்கா


 

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும்  தற்போதைய  சூழ்நிலையில்  அப்பாவி மக்கள் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல்  வீதிகளில் இறங்கி போராடும் நிலையில் அதனை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். 

மேலும் ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது. அவர்களின் பயணம் குறுகியது என  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் வீதியில் இறங்கி போராட வேண்டாம், கூச்சலிட வேண்டாம் என்கிறார். இது சிறந்த தலைவர் ஒருவருடைய பண்பல்ல.

 ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கக்கூடிய  தீர்வும் இதுவல்ல. முதலில் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை கண்டறிய வேண்டும்.

பின்னர் அதற்கு தீர்வைப்  பெற்றுக் கொடுக்க வேண்டும். முதலில் ஏன் அப்பாவி மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்? என்பதை அறிய வேண்டும்  பசியின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு போராடுகிறார்கள். 

நாட்டு மக்களின் வாழ்க்கை தற்போது பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அதன்காரணமாகவே அவர்கள் போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் போராட்டங்களும் வன்முறைகளும்  பசியின் காரணமாகவே முதலில் ஏற்படும்.  இரண்டாவது மனநிலை விரக்தியின் காரணமாக ஏற்படும். 

முன்னர் ஒரு தடவை மனம் விரக்தி அடைந்து அதன் ஊடாக முழு நாடும்  தீ பற்றி எரிந்ததை மறக்க முடியாது.  மற்றொரு தடவை அவ்வாறானதொரு நிலைக்கு நாட்டை கொண்டு செல்வதற்கு வாய்ப்பளிக்க முடியாது. இவ்வாறு நிலை ஏற்பட முன்னர் அதனை நிறுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி மக்களை இராணுவத்தை க் கொண்டு அடக்குவேன், அவசரகால சட்டத்தை அமுல்ப்படுத்துவேன் என்று ஹிட்லர் போன்று செயல்படுவேன் என்று கூறுவது இதற்கான தீர்வல்ல. 

நாட்டின் தலைவர்கள் மகாத்மா காந்தியை போன்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். 

காந்தி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் வரலாற்று புத்தகங்களில் நல்ல பக்கங்களில் எழுதப்படுகின்றன . ஆனால் ஹிட்லர் போன்ற தலைவர்களின் பெயர்களை மக்கள் கேட்கும் போதே வெறுக்கின்றனர் . தலைவர்ள் காந்தி போன்று இருக்க வேண்டும். ஹிட்லர் போன்றல்ல. 

மேலும் ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு நீண்டகாலம் பயணிக்க முடியாது. அவர்களின் ஆட்சி காலம் மிகக் குறுகியது என்றார்.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »