Our Feeds


Thursday, November 24, 2022

News Editor

சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம் - கல்வி அமைச்சர் சுசில்


 

சிறந்த ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (நவ. 24) தயாசிறி ஜயசேகர எம்.பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை  நியமிக்கும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கிணங்க இதுவரை காலமும் வழங்கப்பட்ட நியமன முறைக்கு பதிலாக முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் முக்கிய செயற்பாடாக 19 பீடங்களையும் ஒன்றிணைத்து கல்விக்கான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தில் நான்கு வருட பட்டப்படிப்பை முடித்த பின்பு ஒரு வருட பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்பின்பே பாடசாலைகளில் அவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படும். அந்த செயல்திட்டம் எதிர்வரும் நான்கு வருடங்களில் நடைமுறைக்கு வரும்.

கல்வித்துறையில் சிறந்து விளங்கும் பின்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இத்தகைய முறைகளே பின்பற்றப்படுகின்றன. சிவில் சேவையை விட ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்படுவது அங்கு பெறும் கௌரவமாக காணப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு நான்கு வருட பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களின் வகுப்பு மாணவர்கள் 85ற்கு மேற்பட்ட புள்ளிகள் பெற வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறு இடம்பெறாவிட்டால் அடுத்த வருடத்தில் அதற்கான நடவடிக்கைகளை அந்த ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே அங்குள்ள நிபந்தனை. அதன் அடிப்படையிலேயே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளும் தீர்மானிக்கப்படுகின்றன என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »