டுவிட்டரில் முடக்கப்பட்டிருந்த பல கணக்குகள் மீண்டும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் இலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றில், இத்திட்டத்துக்கு ஆதரவாக அதிகமானோர் வாக்களித்திருந்ததால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
"Vox Populi, Vox Dei," என இன்று (25) வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றில் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த லத்தீன் பழமொழிக்கு மக்களின் குரலானது இறைவனின் குரலாகும் என அர்த்தமாகும்.
அடுத்த வாரம் முதல் மன்னிப்பு வழங்கல் ஆரம்பமாகும் என இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இலோன் மஸ்ககின் கருத்துக்கணிப்பில் 3.16 மில்லியன் பேர் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் 72.4 சதவீதாமனோர், இடைநிறுத்தப்பட்ட கணக்குகள், சட்டங்களை மீறாவிட்டால், அல்லது தேவையற்ற ஸ்பாம் தகவல்களை அனுப்புவதில் சம்பந்தப்படாவிட்டால் அக்கணக்குகளை மீள அனுமதிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கெனவே, நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றையடுத்து அவரின் டுவிட்டர் கணக்கு கடந்த சனிக்கிழமை மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.