(எம்.வை.எம்.சியாம்)
அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஆர்ப்பாட்டக்காரர்களின் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணி மனோஜ் நாணயக்காரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் காணொளியொன்று வெவ்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த காணொளியில், 'பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் , அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு அவரை கைது செய்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் அதனை செய்ய முடியாது என்று பொலிஸ் மா அதிபர் பதிலளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது குறித்து பொலிஸ்மா அதிபரால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சட்டத்தரணி அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி மனோஜ் நாணயக்காரவினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அவரால் கூறப்பட்டவாறு பணிபுரையோ, கலந்துரையாடலோ அல்லது முறைப்பாடளித்தலோ எதுவும் இடம்பெறவில்லை. எவரேனுமொரு நபர் ஏதேனுமொரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டால் அல்லது கைது செய்யப்படாமை என்பன விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படும்.
குறித்த நபர் செய்துள்ள குற்றம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே அந்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.