அமெரிக்காவில் இன்று நடைபெறும் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்குமாறு தான் சிபாரிசு செய்வதாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான இலோன் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்களும் இத்தேர்தல்களில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் இத்தேர்தல்கள் நடைபெறுவதால், இடைக்காலத் தேர்தல்கள் என இத்தேர்தல்கள் குறிப்பிடப்படுகின்றன.
ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்பின் குடியரசுக் கட்சியும் இத்தேர்தலில் பிரதான கட்சிகளாக உள்ளன.
இந்நிலையில், 'சுயாதீன மனம் கொண்ட வாக்காளர்களுக்கு' என ஆரம்பித்து இலோன் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், பகிரப்பட்ட அதிகாரம் இரு கட்சிகளினதும் மோசமான மிகையானவைகளை கட்டுப்படுத்துகிறது. எனவே, ஜனாதிபதி பதவி ஜனநாயகக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சியைக்கொண்ட காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு நான் சிபாரிசு செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள மக்களில் பெரும்பாலானோரைப் போன்று, ஜனநாயகக் கட்சியின் சில கொள்கைகளையும் குடியரசுக் கட்சியின் சில கொள்கைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அனைத்து கொள்கைகளையும் அல்ல,
எனினும், நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கல் கிளைகளும் ஒரே கட்சியினால் ஆதிக்கம் செலுத்தப்படுமாக இருந்தால் அதிகார சமநிலையை நாம் இழந்துவிடுவோம்' என இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.