(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹர சிறைச்சாலை வளாகத்தில் சுமார் 115 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்த பள்ளிவாசலை சிறைச்சாலை நிர்வாகம் கையேற்று சிறைச்சாலைகளின் ஊழியர்களின் ஓய்வு அறையாக மாற்றிக் கொண்டுள்ளதால் மூன்றரை வருடங்களாக இப்பகுதி முஸ்லிம்கள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே இப்பகுதி முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் ஒன்றினை நிறுவிக்கொள்வதற்கு மாற்றுக்காணியொன்றினை பெற்றுத்தாருங்கள் என மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளர் சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“நீங்கள் பிரதமராகவும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து 2019 இல் பள்ளிவாசல் மூடப்பட்டு சிறைச்சாலை நிர்வாகத்தினால் கையேற்கப்பட்டு ஓய்வு அறையாக மாற்றப்பட்டு புத்தர் சிலையும் வைக்கப்பட்டது.
அன்று முதல் இன்றுவரை நாங்கள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் தொடர்பு கொண்டுள்ளோம். பாதுகாப்பு அமைச்சு, வக்பு சபை, நீதியமைச்சு, கலாசார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உட்பட அனைத்து நிறுவனங்களையும் தொடர்பு கொண்டுள்ளோம். ஆனால் எங்களுக்கு பள்ளிவாசலொன்று நிர்மாணித்துக் கொள்வதற்கு காணியொன்று ஒதுக்கப்படவில்லை.
சமயக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு பள்ளிவாசல் ஒன்று இப்பகுதியில் இன்றி நூற்றுக்கணக்கான முஸ்ஸிம்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பள்ளிவாசல் ஒன்றினை நிர்மாணித்துக்கொள்வதற்கு காணி ஒதுக்கித் தருவதாக கடந்தகால அரசினால் உறுதியளிக்கப்பட்டு வருடங்கள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. எனவே மஹர பகுதி முஸ்லிம்களுக்கு சமய கடமைகளை மேற்கொள்வதற்கு பள்ளிவாசலொன்றினை நிர்மாணிப்பதற்கு தாமதியாது காணியொன்றினை ஒதுக்கித்தருமாறு வேண்டுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதையடுத்து திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் மஹர பகுதிக்கு விஜயம் செய்து காணியொன்றினை இனங்காணும் முயற்சிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
என்றாலும் இந்நடவடிக்கைகள் தாமதமாகவே இடம் பெறுவதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது.
அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் ஹபீல் லக்ஸான தெரிவித்தார்.-Vidivelli