இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு நாட்டின் கடனாளிகள் கோரும் விளக்கங்களை வழங்குவதற்காக, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக, இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு கடனாளிகள் தொடர்பாக, தெளிவுபடுத்தல்கள் முதலில் மேற்கொள்ளப்படும்.இதன் பின்னரே, மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு புதிய திகதி நிர்ணயம் செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் கடனாளிகளின் சந்தேகங்கள் அல்லது அவர்களுக்கும் இலங்கையின் மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் என்ன பேசப்படுகிறது என்பது பற்றிய விபரங்களை சேமசிங்க தெரிவிக்கவில்லை.
தங்களுக்கு ஒரு இலக்கு உள்ளது, அதனை டிசம்பரில் சந்திக்க கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது என்று செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டக்குழு ஒப்புதலை வழங்கியுள்ளது.
எனினும், நிதி வழங்கப்படுவதற்கு முன்னர் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது.