டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம், தீவிரமாக வேலை செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான இலோன் மஸ்க் கூறியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க், கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அதன்பின் உயர் அதிகாரிகள் பலரையும் பதவியிலிருந்து நீக்கிய அவர், அந்நிறுவனத்தின் 7500 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.
இந்நிலையில், டுவிட்டர் ஊழியர்களுக்கு இலோன் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்கள் நீண்ட நேரம், கடினமாக வேலை செய்ய வேண்டும். அல்லது வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிபந்தனைக்கு இணக்கம் தெரிவிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நியூ யோர்க் நேரப்படி இன்று வியாழக்கிழமை மாலை 5 மணி (இலங்கை, இந்திய நேரப்படி வெள்ளி காலை 3.30 மணி) வரைஇலோன் மஸ்க் அவகாசம் வழங்கியுள்ளார்.
இதில் கையெழுத்திடாத ஊழியர்கள் 3 மாத சம்பளத்துடன் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.