(எம்.எப்.எம்.பஸீர்)
ராஜகிரிய - நாவல வீதியில் பொலிஸ் வீதித் தடையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து பொது பல சேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல இதற்கான உத்தரவை கடந்த வெள்ளியன்று ( 11) பிறப்பித்துள்ளார்.
சம்பவத்துக்கு முகம்கொடுத்த பொலிஸ் பரிசோதகர், தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாத சூழலில், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 188 ( 2) ஆம் அத்தியாயம் பிரகாரம், ஒருவருடத்துக்குள் மீள வழக்குத் தொடுக்க முடியும் என்ற நிபந்தையின் கீழ் ஞானசார தேரர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் சுற்றிவளைப்பு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி, கலகொட அத்தே ஞானசார தேரர் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டிருந்ததுடன் அப்போது அவர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, தண்டனை சட்டக் கோவையின் 344 ஆம் அத்தியாயத்தின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டுக்கு தான் நிரபராதி என ஞானசார தேரர் அறிவித்த நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் சம்பவத்துக்கு முகம் கொடுத்த பொலிஸ் பரிசோதகர் சுபாஷன தொடர்ச்சியாக வழக்கு தொடர்பில் மன்றில் ஆஜராகாமையால், ஞானசார தேரரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டாலும், அவருக்கு எதிராக ஒருவருடத்துக்குள் மீள வழக்குத் தொடுக்க முறைப்பாட்டாளருக்கு உரிமை இருப்பதாக இதன்போது நீதிவான் சுட்டிக்காட்டினார்.