கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று (23) முற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், மற்றொரு வழக்கில் எதிர்வரும் டிசெம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட தேரரை வேறொரு வழக்குக்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் ஆஜர்படுத்தியபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 89 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பிக்கு சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.என்.எல் மஹவத்த, இன்று (23) நிபந்தனைப் பிணையில் விடுவித்தார்.
சந்தேகநபரை நிபந்தனை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணங்கத் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மன்றுக்கு அறிவித்தார்.
அதனையடுத்து, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் தேரரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும் பிணை நிபந்தனை விதித்த மேலதிக நீதவான், பிணையில் விடுவிக்கப்படும் காலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.