திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாச்சல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை வழங்கி கெளரவித்தார்
அமைதி, நல்லிணக்கம், விடுதலையை முன்னெடுக்கும் சா்வதேச தலைவா்களுக்கு தா்மசாலாவில் செயற்பட்டு வரும் காந்தி மண்டேலா அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட தலாய் லாமா, ‘வன்முறையின்மை, இரக்கம் ஆகியவைதான் உலக அமைதிக்குத் தேவையானது. இவை இந்திய கலாசாரத்தில் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துள்ளது. எந்தப் பிரச்னைக்கும் போரால் தீா்வு காண முடியாது. ஆனால் அமைதி மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் தீா்வு காண முடியும்’ என்றார்.
விருதை வழங்கிய ஹிமாச்சல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் தெரிவிக்கையில், ‘இந்த விருதுக்கு உலகிலேயே மிகவும் பொருத்தமான நபா் தலாய் லாமாதான். அவா் சா்வதேச அமைதிக்கான தூதுவராவார்.
வன்முறையின்மை, இரக்கம் ஆகிய அவரது கொள்கைகள் இன்றைய உலகுக்கு மிகவும் தேவையானவை. இவை இராணுவத்தைவிட மிகவும் வலுவானவை. நல்லொழுக்கம், இரக்கம், பாசம் ஆகியவற்றை பல்லாண்டுகளாக தலாய் லாமா முன்னெடுத்துச் செல்கிறார். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவுக்கு பிறகு உலக குடிமகனாகும் திறமை தலாய் லாமாவுக்கு உண்டு. அவருக்கு எல்லையே இல்லை’ என்றார்.