பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஜேர்மனியை ஜப்பான் தோற்கடித்து வியக்க வைத்தநிலையில், ஜப்பானிய ரசிகர்கள் தமது வெற்றிக்கொண்டாட்டத்துக்கு முன்னர் அரங்கை துப்புரவாக்கியமை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற குழு அணிகளுக்கு இடையிலான போட்டியில், 4 தடவைகள் சம்பியனான ஜேர்மனியை ஜப்பான் 2:1 கோல்களால் வென்றது.
இப்போட்டியைக் காண்பதற்கு கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா அரங்கில் திரண்டிருந்த ஆயிரகணக்கான ஜப்பானிய ரசிகர்கள் உடனடியாக தமதுவெற்றிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கவில்லை. மாறாக, அரங்கை சுத்தப்படுவதற்கு அவர்கள் முன்னுரிமை அளித்தனர்.
அரங்கிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கியவுடன் ஜப்பானிய ரசிகர்கள் நீலநிற குப்பைப் பைகளை சுமந்துகொண்டு, ஏனையோர் விட்டுச் சென்ற கழிவுப்பொருட்களை அதில் சேகரிக்க ஆரம்பித்தனர்.
விளையாட்டரங்களை ரசிகர்கள் சுத்தப்படுத்துவது பலருக்கு வியப்பாக இருந்திருக்கும். ஆனால், ஜப்பானியர்களுக்கு இது சாதாரணமானது.
ஜப்பானிய ரசிகரான டன்னோ, இது தொடர்பாக அல் ஜெஸீராவிடம் கூறுகையில், 'விசேடமானது என நீங்கள் நினைக்கும் விடயம், எமக்கு வழக்கமானது' என்றார்.
'கழிவறையை நாம் பயன்படுத்தும்போது நாமே அதை சுத்தமாக்குகிறோம். ஓர் அறையிலிருந்து வெளியேறும்போது அதை துப்புரவாக்கிவிட்டுச் செல்வோம். அது எமது வழக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.