மத்திய ஆபிரிக்கக் குடியரசின் அரச படையினர் மீதும் அங்குள்ள ரஷ்ய துணைப் படையினர் மீது வெளிநாட்டு விமானமொன்று நேற்று திங்கட்கிழமை அதிகாலை குண்டுகளை வீசிவிட்டுச் சென்றதாக மத்திய ஆபிரிக்க குடியரசு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் மத்திய ஆபிரிக்க குடியரசு சூளுரைத்துள்ளது.
போசான்கோவா நகரிலுள்ள இராணுவத் தளங்களை இலக்கு வைதது குண்டுவீசப்பட்டதாகவும், ஆனால் பொருட்சேதங்களே ஏற்பட்தகாவும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு அரசாங்கம் சூளுரைத்துள்ளது.
இந்த விமானம் குற்றச்செயலில் ஈடுபட்டு விட்டு, வடக்கு நோக்கி சென்று எமது எல்லையைக் கடந்தது எனவும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு தெரிவித்துள்ளது.
அதிகாலை 02.50 மணியளவில் ரஷ்ய படைத்தளம் மீது குண்டுவீசியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். "4 குண்டுச் சத்தங்கள் கேட்டன. ஆனால், விமானத்தில் வெளிச்சம் தென்படவில்லை. விமானத்தின் சத்தமும் குறைவாக இருந்தது. அவ்விமானத்தை நாம் காணவில்லை" என அவர் கூறியுள்ளார்.
போசாங்கோவா நகரம் மத்திய ஆபிரிக்கக் குடியரின் வட பகுதியில் உள்ளது. அண்மைக்காலம் வரை அந்நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அந்நகருக்கு வடக்கே சாட் நாடு அமைந்துள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சாட் நாடுகளுக்கு இடையிலான உறவில் அண்மைக்காலமாக பதற்றம் நிலவுகிறது.
கெமரூனும் மத்திய ஆபிரிக்கக் குடியரசுடன் எல்லையைக் கொண்டுள்ளது. ஆனால், அது மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மத்திய ஆபிரிக்கக் குடியரசின் வடகிழக்குப் பகுதியில் தென் சூடான் உள்ளது.
கிளர்ச்சியாளர்கள் சாட் நாட்டை தமது பின்தளமாகப் பயன்படுத்துவதற்கு சாட் அனுமதிப்பதாகவும், 2003 முதல் 2013 வரை மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜனாதிபதியாக பதவி வகித்தவரும் கிளர்ச்சியாளர்களின் பிரதான தலைவருமான பிராங்சுவா பொஸிஸேவுக்கு புகலிடம் வழங்கியதாகவும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு குற்றம் சுமத்துகிறது.
அதேவேளை, சாட் கிளர்ச்சியாளர்களுக்கு மத்திய ஆபிரிக்கக் குடியரசிலுள்ள ரஷ்ய துணைப்படையினரின் ஆதரவை நாடுவதாக சாட் குற்றம் சுமத்தியிருந்தது. கிளர்ச்சியாளர்களை முறியடிப்பதற்காக ரஷ்யாவின் உதவியை மத்திய ஆபிரிக்க குடியரசின் ஜனாதிபதி ஃபவுஸ்டின் தௌதேரா நாடினார். 2018 முதல் ரஷ்ய துணை இராணுவப் படையினர் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் உள்ளனர்.