பாடசாலை அப்பியாச கொப்பிகள், பாதணிகள், சீருடைகள் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களுக்கான பொருட்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு புதிய பாடசாலை தவணை ஆரம்பத்தின் போது, 5000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள், தற்போது 15000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை பாடசாலை உபகரண விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
80 பக்கங்களை கொண்ட அப்பியாச கொப்பிகள் 55 ரூபாவிலிருந்து 145 ரூபா வரை விலை அதிகரித்துள்ளது.
180 ரூபாவிற்கு காணப்பட்ட சித்திரம் வரையும் கொப்பி, 270 ரூபா வரை அதிகரித்துள்ளது.
80 பக்கங்களை கொண்ட CR அப்பியாச கொப்பி 160 ரூபாவிலிருந்து 320 ரூபா வரை அதிகரித்துள்ளது.
10 ரூபாவிற்கு காணப்பட்ட அழிப்பான் துண்டு, 40 ரூபா வரை அதிகரித்துள்ளது.
சித்திரத்திற்காக பயன்படுத்தப்படும் வர்ண பூச்சி பெட்டியின் விலை 70 ரூபாவிலிருந்து 195 ரூபா வரை அதிகரித்துள்ளது.
10 ரூபாவாக காணப்பட்ட பேனையின் விலை, தற்போது 30 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், A4 பேப்பர் ஒன்றின் விலை ஒரு ரூபாவிலிருந்து 10 ரூபா வரை அதிகரித்துள்ளது.
1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளின் விலைகள், தற்போது 3000 ரூபாவை விடவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோன்று, பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பையின் விலை 1000 ரூபாவிலிருந்து 3000 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாடசாலை உபகரண விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.