(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவது தொடர்பில் வழங்கப்படும் சட்ட ஆலோசனையின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் செய்வதற்கு தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதால் தேர்தலை நடத்துவதற்கு பாதிப்பு ஏற்படுமா என கேட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதுதொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் சட்ட ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. ஏனெனில் உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் அதுதொடர்பில் சட்ட ஆலாேசனை கோரி இருக்கின்றோம்.
எனவே, சட்ட ஆலாேசனை கிடைக்கப்பெற்றதும் சட்ட ஆலோசனையின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேசிய குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.
அத்துடன் எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டாலும் தேர்தல் நடத்துவதற்கு எந்த பாதிப்பும் இல்லை என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.