(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற தீர்மானம் மிக்க குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதியில் கடைசி அணியாக இணைந்துகொண்டது.
சுப்பர் 12 சுற்றில் தனது முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவிடமும் ஸிம்பாபப்வேயிடமும் கடைசி பந்துகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தொடர்ச்சியாக நெதர்லாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஷஹின் ஷா அப்றிடியின் நான்கு விக்கெட் குவியல் பங்ளாதேஷை கட்டுப்படுத்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலியது.
இந்த வெற்றியினால் பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
இன்று காலை நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து நம்பமுடியாத வெற்றியை ஈட்டியதைத் தொடர்ந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அரை இறுதிக்கு செல்வது உறுதியாகி இருந்தது.
இந் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், வெற்றியை மாத்திரம் குறிவைத்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அதனை நிறைவெற்றிக்கொண்டது.
முதலாவது ஓவரில் தஸ்கின் அஹ்மதின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வான் கொடுத்த இலகுவான பிடியை விக்கெட் காப்பாளர் நூருள் ஹசன் தவறவிட்டார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அதன் பின்னர் எல்லாம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.
அணித் தலைவர் பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பாபர் அஸாம் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொஹமத் நவாஸ் (4), ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் மொஹமத் ஹரிஸுடன் நவாஸ் 31 ஒட்டங்களைப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது. (91 - 3 விக்.)
அதனைத் தொடர்ந்து மொஹமத் ஹரிஸும் ஷான் அஹ்மதும் 4ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்கச் செய்தனர்.
இப்திகார் அஹ்மத் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தபோதிலும் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதிசெய்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் நசும் அஹ்மத், ஷக்கிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், எபாதொத் ஹொசெய்ன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தபோதிலும் பின்னர் சரிவுகண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் லிட்டன் தாஸும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 21 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லிட்டன் தாஸ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதன் பின்னர் ஷன்டோவும் சௌம்யா சர்க்காரும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சிக்கையில் சர்க்கார் 20 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அடுத்த பந்தில் ஷிக்கிப் அல் ஹசன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்ததாக கள மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். அதனை உடனடியாகவே ஷக்கிப் அல் ஹசன் மீளாய்வுக்கு உட்படுத்தினார்.
மூன்றாவது மத்தியஸ்தரின் மீளாய்வின்போது ஷக்கிப் அல் ஹசன் எல்லைக்கோட்டிலிருந்து சிறிது தூரம் முன்னால் நகர்ந்திருப்பதும் பந்து அவரது துடுப்பை உராய்ந்து செல்வதும் சலன அசைவுகளில் தெரிந்தது. ஆனால், மூன்றாவது மத்தியஸ்தர் பந்து துடுப்பில் படவில்லை என தீர்மானித்து களமத்தியஸ்தரின் முன்னைய தீர்ப்பை அங்கீகரித்தார்.
இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் ஷக்கிப் அல் ஹசன் களம் விட்டு வெளியேறாமல் சற்று நேரம் ஆடுகளத்தில் நின்றார். பின்னர் கள மத்தியஸ்தர் அவரை ஆடுகளம் விட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர் களம் விட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க அவ்வணியினால் மீள முடியாமல் போனது.
முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 54 ஓட்டங்களைப் பெற்றார். மத்தியவரிசையில் அபிப் ஹொசெய்ன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.