(எம்.ஆர்.எம்.வசீம்)
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் இலங்கையின் 23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு உலக நாடுகளிடம் கையேந்தியுள்ள நிலையிலும் மக்கள் வாழ முடியாதளவுக்கு வாழ்க்கை சுமைகள் வானளாவ உயர்ந்த நிலையிலும் இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதனால் அனைத்து தரப்பினரிடமும் பெரும் எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம்.
அத்துடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
இதனால் தைரியமான சில முடிவுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வரிச் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார்.
பெருமதி சேர் வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றும் வரி வரம்பை குறைக்கும் அதே வேளையில் தனிநபர் வருமான வரி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
வரவு-செலவுத் திட்டத்தில் செலவுகளை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் வெளிவரலாம்.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம். இது ஒரு சீர்திருத்த வரவு-செலவுத் திட்டமாகவே இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர்த்து டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதற்கமைய வரவு செலவுத்திட்டத்த்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்கு 7 நாட்களும் வரவு செலவுத்திட்டம் மீதான குழு நிலை விவாதத்திற்கு 13 நாட்களுமென 20 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறுவதுடன் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பை முன்னிட்டு கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உட்பட பாராளுமன்றத்தின் முழு கட்டடமும் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படிருந்தது.
வரவுசெலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினம் பொதுமக்கள் கலரி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பாராளுமன்ற வாகனத் தரிப்பிடம் இன்றையதினம் மூடப்பட்டிருப்பதுடன், உறுப்பினர்கள் வருகை தரும் வாகனங்கள் உரிய தரிப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
அத்துடன், இன்றையதினம் போக்குவரத்துப் பொலிஸார், பாராளுமன்ற பாதுகாப்பு பொலிஸாருக்கு மேலதிக பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைக்காக கடமையில் நிறுத்தப்பட்டிருப்பதாகவே பாராளுமன்ற வட்டாரங்களில் இருந்த தெரிய வருகின்றது.