இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு, அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில், 14 வருடங்கள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் தனுஷ்க குணதிலக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.
தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்டி – பெரமாடா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்க நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்கவை மீண்டும் நாளைய தினம் (நவ.07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரட்டை செயலி மூலம் அவுஸ்திரேலியாவிலுள்ள பெண்ணொருவருடன் தொடர்பிலிருந்த தனுஷ்க குணதிலக்க, கடந்த 2ம் திகதி குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸ் நிலையத்;தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனுஷ்க குணதிலக்க இன்று (நவ.06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிக்கான சென்ற தனுஷ்க குணதிலக்க, உபாதை காரணமாக அணியிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த தனுஷ்க குணதிலக்க, கடந்த 2ம் திகதி யுவதியொருவரை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நன்றி: ட்ரூ சிலோன்