(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அரசியல் தலையீடுகளற்ற சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து ராஜபக்ஷாக்களால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல் , அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என்று உறுதியளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மதவாச்சி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் சூது விளையாட்டினை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் இந்த வங்குரோத்து அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மக்கள் உண்பதற்கு உணவைப் பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள போதிலும் , அரசாங்கம் ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவமளித்துக் கொண்டிருக்கிறது.
எமது ஆட்சியில் அரசியல் தலையீடுகளற்ற சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து ராஜபக்ஷக்களால் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல் , அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கின்றேன்.
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய கொள்ளையர்களை கைது செய்யும் பொறுப்பினை , ஷானி அபேசேகரவிடம் வழங்க முடியுமல்லவா? அரசாங்கத்தின் நோக்கம் ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதே என்பதால் தான் அவரிடம் இந்த பொறுப்பினை ஒப்படைக்காமலுள்ளனர்.
தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த 134 உறுப்பினர்களுக்கு பாதுகாப்பையும் , இழப்பீட்டினையும் வழங்குவதே தேசிய நிரலில் முதலிடத்தில் காணப்படுகிறது.
இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காகவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம். தேர்தலினால் மாத்திரமே மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைக்க முடியும். அரசாங்கத்தின் அரசியல் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.
மக்கள் சக்தியினால் சூழ்ச்சிகளை தோல்வியடைச் செய்து , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்படும். தேர்தல் நடத்தப்படும் வரை நாம் எமது போராட்டங்களை தொடர்வோம் என்றார்.