ஹட்டன் பகுதியில் நேற்று இரவு (26) பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், அநாதரவாக வீதியோரத்தில் இருந்த 65 வயதுடைய தாயொருவரை பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாவலப்பிட்டி பேரலுகசின்ன பகுதியைச் சேர்ந்த இந்திராணி குசுமா (வயது 65) என்பவரே அநாதரவான நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் குறித்த தாய், தனது பிள்ளைகளுடன் சிவனொளிபாதமலைக்கு வந்துள்ளார். பின்னர் பிள்ளைகள் அவரை ஹட்டன் நகரில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் தாய் வழிதெரியாமல் ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் நேற்று (26) இரவு வீதியோரம் தங்கியுள்ளார். இவர் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்ட பிரதேச மக்கள் தாயை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாவலப்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தாய் வழங்கிய தகவலின் அடிப்படையில் நாவலப்பிட்டி பொலிஸாரின் ஊடாக தாயின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தாயை அழைத்துச்செல்ல உறவினர்கள் எவரும் முன்வராத பட்சத்தில் அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி நீதவானின் உத்தரவுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸாரிடம் இருக்கும் குறித்த தாய் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தால் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.