பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து, அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு கோரி, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கையளித்த மகஜரை, ஏற்பதற்கு உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவன் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய உதவியளிக்குமாறு கோரி, கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயங்கள், தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மகஜர்களை கையளித்திருந்தனர்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தை நடத்திய சமூக செயற்பாட்டாளர்கள், ஐநா அலுவலகத்திற்கு மகஜரொன்றை கையளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நோர்வே தூதரகம், ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், பிரித்தானிய தூதரகம், அமெரிக்க தூதரகம் மற்றும் கனடா உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றிக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், குறித்த மகஜரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கையளிக்க சமூக செயற்பாட்டாளர்கள் முயற்சித்துள்ளனர்.
எனினும், அந்த மகஜரை ஏற்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு மகஜரை கையளிக்காது, அங்கிருந்து சமூக செயற்பாட்டாளர்கள் வெளியேறியுள்ளனர்.
மகஜரை ஏற்க மறுப்பு தெரிவித்தமைக்கான காரணத்தை அறிந்துக்கொள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை. (TrueCeylon)