(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சுற்றி வளைப்பொன்றில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர், மட்டக்குளியில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பி.எம்.ஆர். அம்பேபிட்டியவின் நேரடி கட்டுப்பாட்டில் மட்டக்குளி மற்றும் கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் இரு பொலிஸ் குழுக்களும், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவொன்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விஷேட விசாரணைகளுக்கு பொலிஸ் உளவுத்துறையின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மட்டக்குளி, சாவியா ஒழுங்கையைச் சேர்ந்த 38 வயதான மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் பர்ஹான் என்பவர், மட்டக்குளி மெத மாவத்தை வீதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கோட்டை நீதிவான் நீதிமன்றில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடுத்திருந்த கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான வழக்கொன்றில் ஆஜராகிவிட்டு, தனது காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பர்ஹான் இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்திந்தார்.
பர்ஹான், மட்டக்குளி மெத மாவத்தையில் இருந்து, சாவியா ஒழுங்கைக்குள் தனது காரை திருப்ப முற்பட்ட வேளை, அவரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று சிறு விபத்தொன்றை ஏற்படுத்தி பர்ஹானை காரிலிருந்து கீழே இறங்கச் செய்த பின்னர், கூரிய ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பர்ஹானை பின் தொடர்ந்து வந்த காரின் விபரங்களை சி.சி.ரி.வி. உள்ளிட்ட சான்றுகள் பிரகாரம் சேகரித்துள்ள பொலிஸார் உளவுத் துறையின் உதவியுடன் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு சுற்றி வளைப்புக்கள் நாடெங்கும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு ஜா எல பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பொன்றில் பர்ஹானும் மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இரு டெட்டனேட்டர்கள், 2 கிலோ அமோனியா நைற்றேட், ஜெலிக் நைட் 2 கூறுகள், இராணுவ சீருடையினை ஒத்த இரு இராணுவ சீருடை தொகுதிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக அப்போது பொலிஸார் கூறினர்.
குறித்த விசாரணைகளின் கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பட்ட பின்னர், சான்றுகள் இல்லாமையால் கைது செய்யப்பட்டோரில் மூவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் பர்ஹானும் அடங்கின்றார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, கோட்டை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள கறுப்புப் பண சுத்திகரிப்பு வழக்கானது, பர்ஹான் உண்டியல் மற்றும் ஹவாலா முறைகள் ஊடாக பணப் பரிமாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக சந்தேகத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு என பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
இந்நிலையில் பர்ஹானின் கொலைக்கான காரணம், அவரை கொலை செய்தவர்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளிப்படுத்தப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
எவ்வாறாயினும் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள அறிவியல் தடயங்களை வைத்து குற்றவாளிகளை நெருங்கி வருவதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரகேசரி