அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடைவெளி அதிகரித்துக் காணப்படுகிறது. இதை இல்லாமல் செய்ய உள்ளூராட்சி தேர்தல்களையும் மாகாணசபை தேர்தல்களையும் தாமதமின்றி நடத்தவேண்டும் என்று இலங்கை தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக பேரவை 'அரசியல் உறுதிப்பாட்டை உத்தரவாதம் செய்ய தேர்தல்களே ஜனநாயக வழி ' என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.
அதன் விபரம் வருமாறு,
பொருளாதார மீட்சி என்ற பொதுவான இலக்கை அடைய அரசியல் உறுதிப்பாடு முக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றார். அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் தடுக்க பாதுகாப்பு படைகள் பயன்படுத்தப்படும் என்ற அவரின் அண்மைய அறிவிப்பு பொருளாதார இடர்பாடுகள் தீவிரமடையப்போகின்றன என்ற அரசாங்கத்தின் எதிர்பார்ப்பின் அறிகுறியாகும்.
பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஒரு அரசியல் சமுதாயத்தில் நியாயப்பாட்டின் ஊடாக அல்லது பலவந்தத்தின் ஊடாக உறுதிப்பாட்டை உத்தரவாதப்படுத்தமுடியும். அரசியல் உறுதிப்பாட்டை ஒரு வெற்றிடத்தில் தோற்றுவிக்கமுடியாது. மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் உள்ள பிரச்சினைகளையும் பாராளுமன்றத்தில் தேசியமட்டப் பிரச்சினைகளையும் அரசியல்வாதிகள் வெளிப்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது.
அதனால் அரசியல் உறுதிப்பாட்டை பலப்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாக அரசியல் சமுதாயத்தில் வெவ்வேறு மட்டங்களில் தேர்தல்களை நடத்தவேண்டிய தேவை இருக்கிறது. தற்போதைய தருணத்தில் பொருத்தமானவர்கள் என்று தாங்கள் கருதுகின்ற பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் மக்கள் தெரிவுசெய்து தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்த தேர்தல்கள் வழிவகுக்கும்.இது பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்படவேண்டியவை என்று அரசாங்கம் கருதும் தீர்மானங்களுக்கு ஒரு வழிகாட்டலாகவும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் சுமைகளை பாரப்படுத்தவும் உதவும்.
உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. சட்டரீதியாக ஒத்திவைப்பதற்கான காலமும் உச்சபட்சத்துக்கு வந்துவிட்டது.அந்த தேர்தல்களை நடத்தவேண்டியது அவசியமாகும்.
மாகாணசபை தேர்தல்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்படும் மாகாணசபைகள் ஆட்சிமுறையின் சுமைகளை பகிர்ந்துகொள்ளும். மாகாணசபைகளின் மூலமான அதிகாரப்பரவலாக்கல் நாட்டில் இன அமைதியை மேம்படுத்தும் நோக்குடனேயே கொண்டுவரப்பட்டது.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக மாகாணங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநர்களினால் இப்போது நிருவகிக்கப்படுகின்றன. இது அதிகாரப்பரவலாக்கலை ஏளனம் செய்வதாக அமைகிறது. நாட்டின் 75 வது சுதந்திரதினமளவில் தமிழர்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இவ்வருடம் மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியை அடுத்து முதலில் பிரதமரும் அமைச்சர்களும் பிறகு ஜனாதிபதியும் பதவி விலகினார்கள். அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான வெளி அதிகரித்திருக்கிறது. இந்த வெளியை இல்லாமல் செய்வதற்கான முதல் நடவடிக்கையாக உள்ளூராட்சி தேர்தல்களையும் மாகாணசபை தேர்தல்களையும் தாமதமின்றி நடத்தவேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு செய்தால் அந்த தேர்தல்களில் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளுடன் ஒரு பரந்த கூட்டணியாக ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தினாலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதுடன் மக்களின் ஏற்புடைமையுடன் நியாயபூர்வமான தீர்மானங்களை எடுத்து அரசியல் உறுதிப்பாட்டையும் உத்தரவாதப்படுத்தக்கூடியதாக இருக்கும்