தாய்லாந்திலுள்ள பௌத்த தேவாலயமொன்றில் இருந்த பிக்குகளை போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்கள் அனைவரும் இச்சோதனையில் தோல்வியடைந்தனர். இதனால் அந்த தேவாலயம் பிக்குகள் இன்றி வெறுமையடைந்தது.
பேட்சபன் மாகாணத்தின் புங் சாம் பான் மாவட்டத்திலுள்ள தேவாலயமொன்றின் பிக்குகள் மெதம்பெத்தமைன் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கின்றனரா என அறிவதற்காக திங்கட்கிழமை (28) இச்சோதனை நடத்தப்பட்டது.
அங்கு 5 பிக்குகள் இருந்தனர். இவர்களில் அனைவரும் சோதனையில் தோல்வியுற்றனர் என உள்ளூர் அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்படி பிக்குகள், போதைப்பொருள் புனர்வாழ்வுக்காக சுகாதார நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த 5 பிக்குகளும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதால், தேவாலயம் வெறிச்சோடியுள்ளது. தானம் வழங்குதல் போன்ற புண்ணியக் காரியங்களை மேற்கொள்வதற்கு பிக்குகள் இல்லாதமை குறித்து அயல்கிராமங்களிலுள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர்.