Our Feeds


Sunday, November 27, 2022

ShortNews Admin

எமக்கு நேர்ந்த அநியாயங்களை நாம் ஒரு போதும் மறந்து விட முடியாது : நியாயம் கோருகின்றோம் என்கிறார் ஹக்கீம்



வேண்டுமென்றே வெறுப்புணர்வைத் தூண்டி அதன் மூலமாக எங்களுக்குச் செய்யப்பட்ட  அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோரி நிற்கின்றோம் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை (நவ.26)  தவிசாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

ஏப்ரல் 21 இன் பயங்கவாதக் கும்பலைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை. நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை.

அந்தச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு.

அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்திற்கான போராட்டமுமல்ல. இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்றது.

இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

மேலும், முள்ளிவாய்க்கால் சம்பவம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை  இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு நடந்த அநியாயங்களைக் கண்டறிவதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்துழுவொன்று அமைக்கப்படவுள்ளது. 

அதேநேரம் அடுத்து வரும் அரசியல் என்பது வித்தியாசமாக நடக்கப் போகின்றது. அந்த வித்தியாசமான அரசியலில் முஸ்லிம் சமூகமாக இருக்கட்டும் தமிழ் சமூகமாக இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் மிகக் கவனமாகக் காய்நகர்த்தி சரியான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். என்னதான் பேசினாலும் துரோகச் செயல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவு காண முடியாது.

துரோகத்தைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தைக் கடத்துவதல்ல நோக்கம். தெற்கிலுள்ள சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கோரிக்கைகள் நியாயமானது என்று நம்புகின்ற அளவக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவென நான் நம்புகின்றேன்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »