(எம்.மனோசித்ரா)
அரச நிர்வாகத்தினுள் பாரிய மோசடிக்காரர்கள் இருக்கும் வரை, சர்வதேசத்திடமிருந்து எவ்வித உதவிகளும் கிடைக்கப் பெறாது. ஊழல் மோசடிகள் தீவிரமடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல.
இலங்கை ஊழலற்ற நாடு என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சு.க. தலைமையகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அண்மையில் எதிர்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கையெழுத்திட்டு தேர்தல் ஆணைக்குழுவில் கடிதமொன்றை கையளித்துள்ளோம்.
அது மாத்திரமின்றி தனிப்பட்ட ரீதியிலும் ஆணைக்குழுவிற்குச் சென்று தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் தேர்தலை நடத்துவதற்கான அவசியம் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையிலும் தாக்கம் செலுத்துகிறது. தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் ஆட்சியாளர்கள் மீது கொண்டுள்ள கோபம் சற்றேனும் குறைவடையும்.
வாக்களிப்பில் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர். தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்ற கொள்கையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.
நாம் நடுத்தர வருமானம் பெரும் நாடாக இருந்து , தற்போது குறைந்த வருமானம் பெரும் நாடாக பின்தள்ளப்பட்டுள்ளமை சர்வதேச மட்டத்தில் நாம் பெற்றுக் கொண்ட பாரிய தோல்வியாகும்.
அரச நிர்வாகத்தினுள் பாரிய மோசடிக்காரர்கள் இருக்கும் வரை, சர்வதேசத்திடமிருந்து எவ்வித உதவிகளும் கிடைக்கப் பெறாது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னரும் , 2019 க்கு பின்னரும் இந்நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. ஊழல் மோசடிகள் தீவிரமடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல.
இலங்கை ஊழலற்ற நாடு என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்க வேண்டும். 2019 தேர்தல் பிரசாரத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் குறிப்பிட்டு , தேசிய பாதுகாப்பினை முன்வைத்து என்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிய ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டது.